பிரான்ஸ்: பாலியல் தொழிலாளிக்குப் பணம் கொடுப்பதை தண்டிக்க புது சட்டம்

பட மூலாதாரம், Reuters
உடலுறவுக்காக பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளியின் சேவைகளுக்குப் பணம் கொடுப்பதாக கைது செய்யப்படும் நபர் முதல்முறை பிடிபடும்போது அவருக்கு 1700 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
பிரான்ஸில் இருக்கும் சுமார் முப்பதாயிரம் பாலியல் தொழிலாளிகளை இந்த புதிய சட்டம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இன்னொருவரின் உடம்பை பணம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்கிற எண்ணப்போக்கை மாற்றவேண்டியது அவசியம் என்றும் அதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இந்த சட்டத்தைக் கொண்டுவர பாடுபட்டவர்களில் முக்கியமானவரான மௌத் ஒலிவர் தெரிவித்திருக்கிறார்.
பாலியல் தொழிலாளர்களில் சிலர் ஒரு குழுவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
"எங்களை யாரும் விடுவிக்கவேண்டாம். எங்களைப் பாதுகாத்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும்" என்கிற பதாகையை அவர்கள் ஏந்தியிருந்தனர்.




























