சீனா: ஆறுகோடி பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்திருப்பது ஏன்?
சீனாவின் முக்கியமான சமூக சவால்களில் ஒன்றான பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கும் குழந்தைகள் குறித்த தேசிய கணக்கெடுப்பை நடத்தத் துவங்கியிருக்கிறது.
பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் பெற்றோர்களால் கிராமங்களில் விடப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் ஆறுகோடி பேர் இருக்கலாம் என்று உத்தேச கணக்குகள் கூறுகின்றன.
இந்த பிரச்சனையால் மோசமாக பாதிக்கப்பட்ட சீனாவின் இரண்டு பிரதேசங்களுக்குச் சென்ற பிபிசியின் செய்தியாளர்கள் பெற்றோரைப் பிரிந்து வளரும் பிள்ளைகள் சிலரை சந்தித்தார்கள்.
பதினான்கு வயது தவ் லானும் அவர் தம்பியும் தமக்கான காய்கறிகளை தாமே பயிரிடுகிறார்கள். உணவையும் அவர்களே சமைத்துக்கொள்கிறார்கள்.
இவர்களின் பெற்றோர் ஆயிரம் மைலுக்கு அப்பால் வேலை செய்கிறார்கள். ஆண்டுக்கொருமுறை மட்டுமே வந்து செல்வார்கள்.
தங்கள் பிள்ளைகள் எவ்வளவு தூரம் மனம் நொந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
தன் பெற்றோரிடம் தன் கஷ்டத்தை சொல்ல முடியாது என்று கூறும் தவ் லான், "அவர்களே அங்கு கஷ்டத்தில் இருக்கிறார்கள். என்னப்பற்றி அவர்கள் கவலைப்படுவதை நான் விரும்பவில்லை" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
சில பள்ளிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பெற்றோர் இல்லாமல் வளர்கிறார்கள்.
இந்த பிரச்சனை குறித்து சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை பெரிதாக எதுவும் செய்யவில்லை.
இப்படி விடப்படும் பெரும்பாலான குழந்தைகள் தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் பதினோறு வயது தாங் யுவென்.
தன் பெற்றோர் தன்னோடு இல்லை என்றும் அவர்கள் துணி தைக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதாகவும் கூறும் தாங் யுவென் அவர்கள் பணம் சம்பாதிக்க சிரமப்படுவது தனக்குத் தெரியும் என்றும் ஆனாலும் அவர்கள் இல்லாதது தனக்கு மிகவும் வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவரது தந்தையும் தாயும் பல ஆண்டுகளாக நகரத்தில் தங்கி வேலை செய்திருந்தாலும் சீன அரசின் பார்வையில் அவர்கள் இருவரும் குடியேறித் தொழிலாளிகள் மட்டுமே. அதனால் இவர்களின் பிள்ளைகளுக்கு இவர்கள் வேலை செய்யும் நகரத்தின் உள்ளூர் பள்ளிகளில் இடம் கிடைக்காது.
தாங் யுவென் பிபிசிக்கு அளித்திருந்த பேட்டியை பார்த்த அவர் பெற்றோர் கலங்கினார்கள்.
தன் மிகப்பெரிய கவலையே தன் மகனின் பாதுகாப்பு பற்றியதே என்று பிபிசியிடம் தெரிவித்த தாங் யுவெனின் தாயார் லியு டிங், தாங்கள் வேலை செய்யும் நகரத்தின் பள்ளிகளில் சேர்க்கத்தடை இல்லாவிட்டால் தங்களின் குழந்தைகளை தங்களோடு அழைத்து வந்திருப்போம் என்றும் கூறினார்.
ஆறுகோடி குழந்தைகள் பெற்றோரை விட்டுப்பிரிந்து வளரும் பிரச்சனை மிக அவசரமானது என்பதை சீன அரசு ஏற்றுக்கொள்கிறது.
அதேசமயம், அரசு இதற்காக ஏதாவது செய்யாதவரை பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒரு சேர அழுத்தும் சுமையாகவே இந்த பிரச்சனை நீடிக்கும்.