இராக்கில் புதிய அரசு அமைவதில் தாமதம்; அதிகரிக்கும் பதற்றம்
இராக்கிய பிரதமர் ஹைதர் அபாதியின் அமைச்சரவையை மாற்றியமைக்கும் திட்டம் மீதான வாக்கெடுப்பை அந்நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமை வரை ஒத்திவைத்திருக்கிறது.
அரசியல் பிளவுக்கு மத்தியில் ஐந்து புதிய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையன்று அறிவிக்கப்பட்டார்கள்.
ஆனால் அரசாங்கத்தை அமைப்பதில் ஏற்படும் தாமதம் பதற்றத்தை அதிகரிப்பதோடு ஆர்பாட்டங்களையும் அதிகரித்துள்ளது.
அரசியல் தலைவர்கள் மீது அதிருப்தியுற்ற இராக்கியர்கள் மீண்டும் தெருவில் இறங்கி போராடத்துவங்கியிருக்கிறார்கள்.
பாக்தாத் நகரின் மத்தியிலுள்ள தாஹிர் சதுக்கத்தில் முகாமிட்டுள்ள ஆர்பாட்டக்காரர்களோடு இவர்களும் சேர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் முகாமாக இது மாறியிருக்கிறது.
கடந்த மூன்று வாரங்களாக இந்த சதுக்கத்தில் முகாமிட்டிருக்கும் பலரில் ஹசனும் ஒருவர். "இந்த அரசு மிகப்பெரும் தோல்வியடைந்திருக்கிறது. எதுவுமே செய்யவில்லை. தங்களின் சுயநலன்கள், வங்கிக் கணக்குகள், வெளிநாடுகளில் வாங்கும் சொத்துக்கள் பற்றி மட்டுமே இவர்கள் கவலைப்படுகிறார்கள். இவர்களால் எந்த பயனுமில்லை. நாட்டின் நிலையைப் பாருங்கள். மக்கள் வாழ்க்கை படுமோசமாகிவிட்டது," என்கிறார் ஹசன்.
இராக்கியக் கொடிகளின் கீழ் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளும் இத்தகைய காட்சிகள் பாக்தாதில் அபூர்வமானவை. அரசில் இருப்பதாக கருதப்படும் ஊழலுக்கு எதிரான அபூர்வமான ஒற்றுமை இது.
இந்த கோபம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. சீர்திருத்தம் தொடர்பான விவாதம் கைகலப்பில் முடிந்தது.
தனது புது அமைச்சரவை குறித்த உறுப்பினர்களின் விவாதத்தில் பிரதமர் வெறும் பார்வையாளராக அமர்ந்திருந்தார்.
ஏற்கனவே சிரமப்படும் ஒரு நாட்டில் இந்த நெருக்கடி கூடுதல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கலாமென அஞ்சப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நடப்பவை நாகரிகமற்ற செயல்கள் என்கிறார் இராக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மாகித் ஷெங்காலி. "இது சரியல்ல. இராக் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஒரு பக்கம் சீர்திருத்தங்களுக்காகவும், அடிப்படை சேவைகளுக்காகவும், பொருளாதார நெருக்கடிக்காகவும், மக்கள் போராடுகிறார்கள். மறுபக்கம் ஐசிஸுக்கு எதிரான போர் நடக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்லவேண்டும்", என்கிறார் அவர்.
ஆனால் தாஹிர் சதுக்கத்தில் போராடுபவர்களோ அரசு தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும்வரை தங்களின் ஆர்பாட்ட அழுத்தம் தொடரும் என்கிறார்கள்.