காணாமல் போகும் 11,000 பிபிசி சமையல் குறிப்புகள்

பிபிசியின் இணைய நிதியில் சுமார் 15 மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங்க் பவுண்ட்களை சேமிக்கும் நோக்கத்தில் பிபிசியின் உணவுக்கான பிரத்யேக இணையதளம் மூடப்படவிருப்பதாக பிபிசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த இணையதளத்தில் சுமார் 11,000 சமையல் குறிப்புகள் இருக்கின்றன.
இந்த சமையல் குறிப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சிலவற்றை பிபிசியின் வர்த்தக இணையதளமான பிபிசி குட் ஃபுட் இணையதளத்துக்கு மாற்றலாமா என்றும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் குறிப்புகள் இணையத்தில் கிடைக்கும். ஆனால் அவை ஒளிபரப்பான தினத்தில் இருந்து 30 நாட்களுக்கு மட்டுமே இனிமேல் இணையத்தில் இருக்கும்.
பிபிசியின் இணைய சேவைகள் இனிமேல் "தனித்துவமானதாகவும் உயர்தரமானதாகவும்" இருப்பதோடு "பொதுமக்களின் பணத்துக்கு உரிய மதிப்பை திரும்ப அளிக்கும் விதமாகவும் இருக்கவேண்டும்" என்று பிபிசியைச் சேர்ந்தவர் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AFP
"பிபிசியின் பயன்பாட்டாளர்கள் அதன் சமையல் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்துமே இணையத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றாலும், எல்லோருக்கும் எல்லாமுமாக பிபிசியே ஆக்கிரமிக்க விரும்பவில்லை என்பதை தற்போதைய மாற்றங்கள் உணர்த்தும்", என்றும் அவர் தெரிவித்தார்.
பிசியின் எதிர்காலம் குறித்து பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த முடிவு வெளியாகியுள்ளது.
பிபிசி இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் எதிர்காலம் குறித்து பிபிசி செய்தி மற்றும் நிகழ்ச்சிகளுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ஹார்டிங் தமது பணியாளர்களுக்கு விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசியின் உணவு இணையதளத்தில் சாதாரண பிரட் செய்வது எப்படி என்பது முதல் லாப்ஸ்டறை சமைப்பது எப்படி என்பது வரையில் பலவகையான சமையல் குறிப்புகள் இருக்கின்றன. சலாட் தயாரிக்க மட்டும் 500 ஆலோசனைகள். பை (pies) செய்வதற்கு 3,628 சமையல் குறிப்புகள் உள்ளன.
ஆனால் "குறைக்கப்பட்ட தனித்துவமான" இணைய சேவைகளைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இவையெல்லாம் பிபிசியின் இணைய மெனுவில் இருந்து அகற்றப்படுகின்றன.

பிபிசி இணைய சேவைகள் "அனைத்தையும் ஆக்கிரமிக்கும் சாம்ராஜ்ஜிய அணுகுமுறையை" வெளிப்படுத்துவதாக பிரிட்டிஷ் நிதியமைச்சர் ஜார்ஜ் அஸ்போர்ன் சென்ற ஆண்டு விமர்சித்திருந்தார்.
"சிறப்புக்கட்டுரைகளும் சமையல் குறிப்புகளும் ஒரே இடத்தில் இருந்தால் பிபிசியின் இணையதளம் என்பது ஒரே நேரத்தில் நாட்டின் தேசிய பத்திரிகையாகவும் தேசிய ஒளி/ஒலிபரப்பாளராகவும் செயற்படும் சூழல் உருவாகிறது", என்று தெரிவித்த ஜார்ஜ் அஸ்போர்ன், இந்த விவகாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இனிமேல் "தனித்துவமான தகவல்களே" பிபிசியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்று பிபிசி தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட பிரிட்டிஷ் கலாச்சார அமைச்சர் ஜான் விட்டிங்கேல் தெரிவித்திருக்கிறார்.
பிபிசிக்கான நிதியாதாரமாக இருக்கும் தொலைக்காட்சி உரிம கட்டணம் குறைந்தபட்சம் அடுத்த பதினோறு ஆண்டுகளுக்குத் தொடரும் என்று அறிவித்திருக்கும் அவர், வருடாந்த பணவீக்கத்துக்கு ஏற்ப இந்த தொலைக்காட்சி உரிம கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும், பிபிசியின் ஐபிளேயர் பயன்பாட்டாளர்களும் இனிமேல் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
450,000 ஸ்டெர்லிங்க் பவுண்ட்களுக்கு மேல் ஊதியம் பெறும் பிபிசியின் முழு நேர மற்றும் பகுதிநேரப்பணியாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
































