காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் ராணுவம்
வனப்பகுதிக்குள் காணாமல் போன 7 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க ஜப்பான் ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், NTV
ஜப்பானின் வடபகுதி தீவான ஹொகைடோவில் உள்ள மலைப்பகுதியில் அந்தச் சிறுவன் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில், அவனைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. ராணுவத்தின் தற்காப்புப் படையை இந்தப் பணியில் உதவுமாறு நெனே நகர அதிகாரிகள் கோரியுள்ளனர். எளிதில் நெருங்க முடியாத பகுதிகள்,
ஆழமான குகைகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு கோரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.
யமடோ டனூகா என்ற அந்தச் சிறுவனின் பெற்றோர், கடந்த வாரம் அந்தச் சிறுவக்கு தண்டனை வழங்குவதற்காக வனப்பகுதியில் விட்டதாக ஒப்புக்கொண்டனர். அந்தச் சிறுவன், கற்களை வீசிக்கொண்டே இருந்தபோது, அதை நிறுத்துமாறு பெற்றோர் கூறியும் அவன் அதைக் கேட்க மறுத்ததால், அத்தகைய தண்டனையை வழங்கினார்கள். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்து பார்த்தபோது, அந்தச் சிறுவனைக் காணவில்லை.
அந்த வனப்பகுதி, வனக்கரடிகள் அதிகம் மிகுந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.




























