எரிபொருள் சிக்கன அளவீட்டில் சர்ச்சை: சுசுக்கி நிறுவனத்தில் ஜப்பானிய அதிகாரிகள் சோதனை

பட மூலாதாரம், Getty
முறையற்ற எரிபொருள் சிக்கன பரிசோதனை சர்ச்சையில் சிக்கியுள்ள கார் உற்பத்தி நிறுவனமான சுசுக்கி விசாரணையின் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை ஜப்பானிய அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
தங்கள் கார்களை வாங்கியவர்களை ஏமாற்றவில்லை என்பதை உறுதியாக கூறி வரும் சுசுக்கி நிறுவனத்தின் வாதத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை ஆராயவே இந்த சோதனையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty
கடந்த மாதம் சுசுக்கி நிறுவனம், தங்களுடைய பரிசோதனை முறையில் முரண்பாடுகள் இருப்பதை ஒத்துக் கொண்டது.
ஆனால், விளம்பரப்படுத்தப்பட்டதை விட வாகனங்கள் குறைந்த எரிபொருள் சிக்கனம் உடையவை என்ற வாதத்தை சுசுக்கி நிறுவனம் மறுத்துள்ளது.
கடந்த மாதம், எரிபொருள் நுகர்வு பரிசோதனையில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக சுசுக்கியின் போட்டி நிறுவனமான மிட்சுபிஷி மோட்டார்ஸின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




























