'உற்பத்தி துறையில் உலகின் 6-ஆவது பெரிய நாடு இந்தியா': பட்ஜெட் உரையை தொடங்கிய அருண் ஜேட்லி

பிரசுரிக்கப்பட்டது

2017-18ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது தாக்கல் செய்து வருகிறார்.

அருண் ஜேட்லி
படக்குறிப்பு, 2017-18ம் ஆண்டு இந்திய பட்ஜெட்டைதாக்கல் செய்தார் அருண் ஜேட்லி

இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கினார்.

தனது பட்ஜெட் உரையை தொடங்கி அருண் ஜேட்லி உரையாற்றுகையில், ''இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மேலும், நாட்டை சீரழித்து வந்த கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

''உற்பத்தி துறையில் உலகின் 6-ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது'' என்று தெரிவித்த அருண் ஜேட்லி, நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தொடரும் என்றும், மக்கள் நலனை மத்திய அரசு மிகவும் கருத்தில் கொள்கிறது என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டில் நாட்டில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

கிராமப்புறங்களின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை இன்றைய பட்ஜெட்டின் பிரதான நோக்கங்களாக இருக்கும் என்று தெரிவித்த அருண் ஜேட்லி தொடர்ந்து பட்ஜெட் உரையாற்றி வருகிறார்.

முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான இ. அகமது இன்று (புதன்கிழமை) அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். மாரடைப்பால் அகமது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமான நாடாளுமன்ற உறுப்பினர் இ. அகமது
படக்குறிப்பு, காலமான நாடாளுமன்ற உறுப்பினர் இ. அகமது

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தாக்கல் செய்வதாக இருந்த பட்ஜெட்டை ஒத்தி வைத்து இன்னொரு நாளில் தாக்கல் செய்ய வலியுறுத்தினர்.

இதனால் இன்று அவை ஒத்திவைக்கப்படுமோ என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில்,இறந்த உறுப்பினரின் நினைவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தியவுடன் அவை நடவடிக்கைகள் தொடங்கின.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்