அனிதாவின் மரணம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள்
நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலைசெய்துகொண்ட அனிதாவுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இன்று காலையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு அமைப்பினரும் அண்ணா சாலையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று பிற்பகலில் கடற்கரையைச் நோக்கிச் செல்ல இருந்த முன்சார ரயில் முன்பாக தண்டவாளத்தில் இறங்கி ஓடிய லயோலா கல்லூரி மாணவர்கள், அந்த ரயிலை மறித்தனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சென்னை தி. நகரில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோதியின் உருவ பொம்மையை எரித்துக் கைதாகினர்.
அதேபோல, புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமரின் உருவ பொம்மையை எரித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர். போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மெரீனா மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவாளன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோயம்புத்தூரில் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறிக்க முயன்ற மாணவர் அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தி.மு.கவின் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதுபோல படுக்கவைக்கப்பட்டு, அருகில் பெற்றோர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் மோடியின் உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைதுசெய்யப்பட்டனர். மதுரையில் பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க. தலைவர்களின் உருவப் படங்களை எரித்தனர்.
அனிதாவின் மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் இன்று முழு கடை அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அனிதாவின் உடலுக்கு திருமாவளவன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

































