கௌரி கொலைக்கு நியாயம் கேட்டு கோஷமிட்டதால் மாணவர்கள், எழுத்தாளர்கள் கைது

பட மூலாதாரம், BBC Tamil
கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட பெங்களுருவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேசுக்கு நீதிகேட்டு சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகே திங்கள்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
பல்வேறு மாணவ அமைப்புகள், இளந்தமிழகம், திராவிடர் விடுதலை கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஆகியோர் நடத்திய இந்த போராட்டத்தில் 'காந்தியை கொன்றவர்கள்தான் கௌரியைக் கொன்றார்கள்' என்று கோஷம் எழுப்பியதை அடுத்து கைதுசெய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
''மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள்தான் பத்திரிக்கையாளர் கௌரியை கொலை செய்தனர் என்ற முழக்கத்துடன் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக நாங்கள் போராட்டம் நடத்த அனுமதி பெற்றோம். நாங்கள் கடிதம் கொடுத்தோம், காவல்துறை எங்களுக்கு வாய்வழி அனுமதி மட்டுமே வழங்கினார்கள். ஆனால் போராட்டத்தின்போது கோஷம் போடக்கூடாது என்று சொல்லி கைதுசெய்தார்கள்,'' என இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த செந்தில் தெரிவித்தார்.
''வெறும் போராட்டத்தோடு முடித்த எங்களை, ஒரு நாள் முழுவதும் மாணவர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரும் கலந்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுத்தது போல கைது நடவடிக்கை அமைந்துவிட்டதில் மகிழ்ச்சி,'' என்றார் செந்தில்.

பிபிசிதமிழிடம் பேசிய பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் வீ.அரசு, போராட்டக்காரர்களுடன் பதாகைகளை தூக்கிச் சென்றதாகவும், போராட்டக்காரர்களை கைது செய்து வண்டியில் ஏற்றிச் சென்று திரும்பிவந்து எழுத்தாளர்களை கைது செய்ததாகக் கூறினார்.
''நான் எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், மங்கை, வ.கீதா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டோம். போராட்டத்தில் கலந்துகொண்டாலே கைது செய்யப்படுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது,'' என்றார்.
மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் சரவணனிடம் கேட்டபோது, காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது என்றும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பியதால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
''மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பியதால் கைது செய்தோம். தற்போது விடுவித்தோம். காந்திக்கு மாலை போடுவதற்கு தடைசொல்லவில்லை. தேவையற்ற கோஷங்கள் இட்டதால் கைது செய்தோம்,'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்
































