சசிகலா குடும்பத்தினரின் இடங்களில் 2-ஆவது நாளாக வருமான வரி சோதனை
சசிகலா குடும்பத்தினர், அவர்களது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வியாழக்கிழமை தொடங்கிய வருமானவரித் துறை சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

வியாழக்கிழமையன்று 187 இடங்களில் சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று 147 இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்றும் அங்குள்ள க்ரீன் டீ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், அதன் மேலாண் இயக்குனர் விவேக் ஜெயராமன் இல்லம், அலுவலகம், அவரது மாமனார் இல்லம், டிடிவி தினகரனின் அலுவலகம், இல்லம், ஜாஸ் சினிமா அலுவலகத்திலும் ஜெயா டிவியில் முக்கிய பதவிகளில் வேலைபார்த்தவர்களின் இல்லம், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் வீடு, தினகரனின் உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், சிவகுமார், பாஸ்கரன் ஆகியோரது இல்லங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடத்திவருகிறது.
கடலூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரின் இல்லம், அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

கோயம்புத்தூரில் உள்ள தொழிலதிபர்கள் ஆறுமுகசாமி, சஜ்ஜீவன் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்துவருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தரப்பு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் பாண்டியன், செந்தில் ஆகியோர் தொடர்புடைய இடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த பாலுச்சாமிக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.
மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் இன்றும் தொடர்ந்தன. அவருக்குச் சொந்தமான செங்கமலத்தயார் கல்லூரியிலும் இரண்டாவது நாளாக சோதனைகள் நடைபெற்றன.

கல்லூரி முன்பாக கூடியிருந்த திவாகரனின் ஆதரவாளர்கள், வருமான வரித் துறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதால், அவர்கள் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் ஓட்டுனர் கனகராஜின் தேனி இல்லத்திலும் சோதனை தற்போது தொடங்கியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் சோதனைகள் தொடங்கின .
187 இடங்களில் சுமார் 1800 அதிகாரிகளை வைத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களிலும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து 317 வங்கிக் கணக்குகள் ஆய்வுசெய்யப்பட்டுவருவதாகவும் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

































