"ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்" என்னும் குறுஞ்செய்திகளை அனுப்புவது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரில் 'திமுகவிற்கு வாக்களிக்காதீர்' என்று தெரிவிக்கும் குறுஞ்செய்தி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரப்பப்பட்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
17-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. மே மாதம் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் நாடுமுழுவதும் வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியிகள் ஈடுபட்டன. தமிழகத்தை பொறுத்தவரை மாநிலத்தை ஆளும் அதிமுக - பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. சமீபத்திய தேர்தல்களை போன்று காங்கிரஸும் திமுகவும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் பயணித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் சமூக வலைதளங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்சிகளுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"ஏர்டெல் நிறுவனத்தின் பெயரில் வந்தது"

பட மூலாதாரம், Raj
இந்நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு "ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ள குறுஞ்செய்தி பலருக்கு அனுப்பப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்தது. ஏர்டெல் நிறுவனத்தின் பெயரோடு, BZ-ALERTS என்னும் பெயரும் அந்த குறுஞ்செய்தியில் உள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள குறுஞ்செய்தியை தானும் பெற்றுள்ளதாக பிபிசியிடம் கூறினார் சென்னையை சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம்.

பட மூலாதாரம், Raj
"என்னுடைய திறன்பேசியில் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்துகிறேன். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 3:31 மணியளவில், என்னுடைய ஐடியா எண்ணுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவுடன் வந்த, "ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்" என்ற குறுஞ்செய்தியை பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏன் இப்படி செய்ய வேண்டுமென்ற கேள்வியும் எனக்கு ஏற்பட்டது" என்று கூறுகிறார் தனியார் நிறுவனமொன்றில் மென்பொறியாளராக பணியாற்றும் ராஜ்.
"இது முற்றிலும் மக்களிடையே மதரீதியிலான வெறுப்புணர்வையும், கொள்கை ரீதியிலான மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வித்திடும் செயலாக நான் பார்க்கிறேன். அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும், இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் விதிகளும் இதன் மூலம் மீறப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஏர்டெல் பெயரில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தொடர்பாக ஏதாவது புகார் அளித்துள்ளீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "இதுபோன்று விதிகளை மீறி யார் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாலும் அது மிகவும் தவறான செயல். அதுமட்டுமின்றி, இதுகுறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அன்றைய தினமே புகார் பதிவு செய்திருந்தேன். இரண்டே நாட்களில் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், VIKRAM RAGHUVANSHI
இந்த விவகாரம் தொடர்பாக ஐடியா நிறுவனத்தை தொடர்புகொண்டு புகாரளிக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை அந்நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியை அடைய முடியாத நிலையே உள்ளது. அடுத்ததாக இந்த குறுஞ்செய்தியில் ஏர்டெல் நிறுவனத்தின் பெயர் உள்ளதால் அந்நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதற்கும் எவ்வித பதிலும் வரவில்லை.
இந்தியாவின் மிகப் பெரிய தேர்தலான மக்களவைத் தேர்தல் நடந்து வரும் சமயத்தில் கூட இந்திய தேர்தல் ஆணையத்தாலோ, ட்ராய் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் உடனடியாக செயல்பட முடியாத நிலை இருப்பது வேதனைக்குரியது" என்று ராஜ் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
தேர்தல் நடத்தை விதி மீறலா?
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையை போகிறது என்று தமிழ்நாடு மாநில துணைத் தேர்தல் ஆணையர் (தகவல் தொழில்நுட்ப பிரிவு) தீபக் ஜேக்கப்பை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. "இந்த விவகாரம் தொடர்பாக எவ்வித புகாரும் என்னுடைய பார்வைக்கு வரவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்புவது குறித்த தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், இதுபோன்ற குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளதா அல்லது இதற்கு பின்பு அரசியல் கட்சியின் செயல்பாடு உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகே இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செய்யப்பட்டுள்ளதா என்பதை இறுதி செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாநில தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் தீபக் ஜேக்கப் கூறினார்.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் கருத்துகளை தெரிந்துகொள்வதற்காக அந்நிறுவனத்தை தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டபோது இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- சபரிமலை நம்பிக்கை பற்றி விரிவாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்போம் - பாஜக தேர்தல் அறிக்கை
- காஷ்மீரில் காவிக் கொடியில் இருந்து பச்சைக் கொடிக்கு மாறிய பாஜக - முஸ்லிம் வாக்காளர்களை கவரவா?
- சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு
- ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏன் அறிவிக்கவில்லை? ப.சிதம்பரம் பதில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































