ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம்
இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். காலையில் கிருஷ்ணகிரியில் அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார், என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் ராகுல்காந்தி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் ஒரே மேடையில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர்.

தி இந்து: "ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு"

பட மூலாதாரம், Getty Images
ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதி கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் மாசை உண்டாக்குவதாக, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுடன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், பராமரிப்புப் பணிகளுக்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா கோரியுள்ளது.

இந்து தமிழ் - "மனநல சிகிச்சையில் உள்ளோருக்கு வாக்களிக்க வாய்ப்பு"

பட மூலாதாரம், Getty Images
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் வாக்களிக்க வசதியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாக்குச்சாவடியை தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழக அளவிலேயே மனநல மருத்துவமனையால் அடையாளம் பெற்ற பகுதி சென்னையிலிருக்கும் கீழ்ப்பாக்கம். 17-ம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டது இந்த மனநல மருத்துவமனை.
இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 900 பேரில் 192 பேர் மிகச்சிறந்த அளவில் இயல்பான நிலைக்குத் திரும்பியுள்ளனர். இவர்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் முதன்முறையாக முயற்சி எடுத்துள்ளது.
வாக்களிக்கவேண்டும் என்றால் அவர்கள் வெளியே சென்று வாக்களிக்க முடியாது. மற்றொரு விஷயம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டவும், பயிற்சியும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அவர்களுக்கான வாக்களிக்கும் பயிற்சியை அளித்தது.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தங்கள் குழுவினருடன் அரசு மனநலக் காப்பகத்துக்குச் சென்றனர். அங்குள்ள 192 மனநலப் பிணியாளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிக்கும் முறையை வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பயிற்சி அளித்தனர். அவர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்குப் பதிலளித்தனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "கின்னஸ் சாதனை படைக்குமா நிசாமாபாத் தொகுதி?"

பட மூலாதாரம், AFP
அதிக வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தெலங்கானாவின் நிசாமாபாத் தொகுதி கின்னஸ் சாதனை முயற்சியில் இடம்பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"தெலங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் விவசாயிகள் உட்பட 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறியதாவது: நிசாமாபாத் தொகுதி வாக்குப்பதிவு நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. மாதிரி வாக்குப்பதிவு நடைபெற கூடுதல் நேரமானதால் ஒருமணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறை எனவே இந்த முயற்சியை கின்னஸ் சாதனை குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
நிசாமாபாத் தொகுதியிலுள்ள 1,778 வாக்குச்சாவடிகளிலும் தலா 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் இடம்பெற்றுள்ளது. வாக்குச்சாவடிகளில் ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இணைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































