ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: செவிலியர், கணவர் கைது

பிரசுரிக்கப்பட்டது

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: செவிலியர், கணவர் கைது

செவிலியர், கணவர் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர், குழந்தைகளை லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்வதாக வாட்சப் ஆடியோ ஒன்று புதன்கிழமை வெளியானதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அந்த செவிலியர் மற்றும் அவரது கணவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளைத் திருடி பணத்துக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதுண்டு. ஆனால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என லட்சக்கணக்கில் விலை பேசி பெண் ஒருவர் விற்பனை செய்வது போன்ற வாட்சப் ஆடியோ புதன்கிழமை இரவில் வெளியானது. அதில் பேசும் அந்தப் பெண், தருமபுரியைச் சேர்ந்த ஒருவரிடம், மனச்சாட்சியின்படி குழந்தைகளை வாங்கி விற்பனை செய்கிறேன். பெண் குழந்தையாக இருந்தால் ரூ.2.70 லட்சம், ஆண் குழந்தையாக இருந்தால் ரு.4.15 லட்சம் வரை ஆகும். அழகாக வேண்டுமானால், அதற்கு ஒரு விலை, ஆரோக்கியமாக வேண்டுமெனில், அதற்கு ஒரு விலை எனப் பேசுகிறார்.

மேலும், இரு தரப்புக்கும் பிரச்னையில்லாதவாறு ஆவணங்கள் அடிப்படையில் குழந்தையை வழங்குவோம். குழந்தை வேண்டுமெனில், முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். தனக்கு கிடைக்கும் கமிஷன் தொகையை கோயிலுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்குமே அளிப்பதாகவும், இத் தொழிலில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பதாகவும், 10 ஆண்டுகள் பணி இருக்கும் நிலையில், விருப்ப ஓய்வு பெற்று இந்தத் தொழிலைச் செய்து வருவதாகவும் அவர் பேசுவது பதிவாகியுள்ளது.

ஒரு குழந்தை கைமாற்றப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிறந்ததுபோல், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலமாக பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்து தரப்படும். அதற்கு சில மாதங்களாகும். தனிப்பட்ட முறையில் ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும். இதுதொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது என அவர் அந்த ஒலி நாடாவில் பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில், ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ராசிபுரத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா (50) என்பது தெரியவந்தது. மேலும், குழந்தை வாங்கி விற்பனை செய்துள்ளதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர்கள் செல்லமுத்து, இந்திரா ஆகியோர் நடத்திய விசாரணையில், தற்போது வரை மூன்று குழந்தைகளை விற்பனை செய்துள்ளதாக அமுதா வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில், கொல்லிமலையில் 2 குழந்தைகளும், சேலம் அன்னதானப் பட்டியில் ஒரு குழந்தையையும் வாங்கி விற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓமலூரில் சட்ட விதிகளுக்குள்பட்டு ஒரு குழந்தையை வழங்கியதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, அமுதாவையும், அவரது கணவர் ரவிசந்திரனையும் காவல் துறையினர் கைது செய்தனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார் என அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர் நாளிதழ் கார்டூன்
படக்குறிப்பு, தினமலர் நாளிதழ் கார்டூன்

தினமலர்: 'என்னை சாகச் சொல்கின்றனர்' சபரிமலை செல்ல முயன்ற பிந்துவின் நிலை என்ன?

''நான் சாக வேண்டும் என, பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்., ஆட்கள் கடுமையாக திட்டினர்,'' என, சபரிமலைக்கு செல்ல முயன்றதால் புகழ் பெற்ற, கேரளாவைச் சேர்ந்த, பிந்து தங்கம் கல்யாணி, குற்றஞ்சாட்டியுள்ளார் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களும், சபரிமலைக்கு செல்லலாம் என, உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு, தீர்ப்பு வழங்கியது.

பிந்து

இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியையான பிந்து, 2018, அக்டோபரில் சபரிமலை செல்ல முயன்றார். ஆனால், பத்தனம் திட்டா மாவட்டம், எருமேலி யில், அவர் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் அவர், ஊடகங்களில் பிரபலமானார்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், கேரளாவில் நடைபெற்ற, லோக்சபா தேர்தலையொட்டி, பட்டம்பியில் உள்ள சமஸ்கிருத கல்லுாரியில், கூடுதல் தேர்தல் அதிகாரியாக, பிந்து பணியாற்றினார்.

அப்போது நடந்த சம்பவம் குறித்து, முகநுாலில் பதிவிட்டுள்ள அவர், பட்டம்பியில் தேர்தல் பணியில் இருந்த போது, வாக்குப் பதிவு செய்ய வந்த சிலர், என்னை சுட்டிக் காட்டி, முணுமுணுத்தபடி இருந்தனர்.நான் பணி முடிந்து, வெளியில் வந்த உடன், அவர்கள் என்னை வழிமறித்து, தரக்குறைவான வார்த்தைகளால், வசைமாரி பொழிந்தனர். ஒருவர், 'நீ இன்னும் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்; செத்து தொலையலாமே...' என திட்டினார்.

அவர்கள், சபரிமலைக்கு, பெண்கள் போவதை விரும்பாத, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆட்கள் என்பதை, தெரிந்து கொண்டேன்.உடனடியாக திரும்பி, நடந்த சம்பவம் குறித்து, உதவி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன்.ஒரு தேர்தல் அதிகாரி மீதான தாக்குதல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். உடனடியாக, இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்): பொள்ளாச்சி விவகாரம் - பிரிவு 376ன் கீழ் வழக்குப்பதிவு

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு சிஐடி குற்றப்பிரிவு போலீஸார் 376 (பாலியல் வன்புணர்வு) பிரிவை சேர்த்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மேலும் சிலரை விசாரித்ததில், இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேர் மீது 376ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைப்பற்றப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்களை கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது தங்கள் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்கள், குற்றவாளிகளையும் அடையாளம் கண்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :