கூடங்குளம் அணு உலையில் வழக்கத்துக்கு மாறான அதிர்வு: தனி விமானத்தில் வந்து சரி செய்த ரஷ்யப் பொறியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறான அதிர்வு சரி செய்யப்பட்டு, மின் உற்பத்தி மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது என்று செய்தி வெளியிட்டுள்ளது ’தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழ்.
இரண்டாவது உலையின் ஜெனரேட்டர் பிரிவில் ஏற்பட்ட இந்த வழக்கத்துக்கு மாறான அதிர்வினை சரி செய்வதற்காக ரஷ்யப் பொறியாளர்கள் தனி விமானத்தில் வந்தனர் என்றும், இந்த வழக்கத்துக்கு மாறான அதிர்வு சரி செய்யப்பட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு இரண்டாவது உலையில் மின் உற்பத்தி தொடங்கியதாகவும் இந்த செய்தி குறிப்பிடுகிறது.
ஜூலை 2013ல் தொடங்கப்பட்ட முதல் உலை தனது முழுத் திறனான 1,000 மெ.வா. மின் உற்பத்தியை செய்து வரும் நிலையில், இந்த வழக்கத்துக்கு மாறான அதிர்வு காரணமாக இரண்டாவது உலை தனது முழு திறனை எட்ட முடியாமல் இருந்தது என்று குறிப்பிடும் இந்தச் செய்தி, கடந்த காலத்தில் இந்த உலையும் 1000 மெ.வா. மின் உற்பத்தி செய்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால், எப்போது இந்த வழக்கத்துக்கு மாறான அதிர்வு கண்டறியப்பட்டது என்பது பற்றிய குறிப்பு அந்த செய்தியில் இல்லை.
கூடங்குளம் அணு உலை வளாகத்தில் 6 அணு உலைகளை ரஷ்யா அமைக்கிறது. 1000 மெ.வா. திறனுள்ள முதலிரண்டு உலைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. 39,747 கோடியில் இரண்டாவது, மூன்றாவது உலைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து, ஆறாம் உலைகளை கட்டுவதற்கான பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
தினத்தந்தி: பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
சென்னையை தவிர பிற பகுதிகளில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது. ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.
பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற்று முடிந்தது. சுமார் 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணி கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற உள்ளன.
கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு அறையில் 8 பேர் மட்டுமே பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக விடைத்தாள் திருத்தும் மதிப்பீட்டு மையங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 67 விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 202 மையங்களாக கல்வித்துறை அதிகரித்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக கவசம் கட்டாயம்
இன்று முதல் தலைமை மதிப்பீட்டாளர்கள் 10 ஆயிரத்து 746 பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். நாளை (வியாழக்கிழமை) முதல் 32 ஆயிரத்து 235 ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் முக கவசங்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், விடைத்தாள் திருத்தும் பணிகளில் சென்னைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும், மேலும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது என்கிற குறிப்பும் அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.
தினகரன்: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா? அரசு தீவிர ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று காரணமாக வழக்கத்துக்கு முன்பே கோடை விடுமுறைவிடப்பட்டு மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் திறக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது தினகரன் நாளிதழ்.
முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக இந்த செய்தி வெளியாகியுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள், தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தைப் பற்றி குறிப்பிடும் இந்த செய்தி, பிறகு செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பள்ளி திறப்பது குறித்து ஆலோசித்ததாகவும், உயர் வகுப்புகளை ஆகஸ்ட் மாதமும், கீழ் வகுப்புகளை செப்டம்பர் மாதமும் தொடங்கலாம் என்று செங்கோட்டையன் ஆலோசனை கூறியதாகவும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை யார் கூறியது என்ற குறிப்போ, மேற்கோளோ இந்த செய்தியில் இல்லை. கேள்விப்பட்ட, விசாரித்து அறிந்த தகவல்களின் அடிப்படையில் செய்தி எழுதப்பட்டதைப் போலத் தெரிகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: முதல் காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 25 சதவீதம் என்ற அளவில் சுருங்கும்

பட மூலாதாரம், Getty Images
சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை மூன்று முக்கியமான பொருளாதார மந்த நிலைகளை சந்தித்த இந்தியா தற்போது தனது நான்காவது பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் பக்கத்தலைப்புச் செய்தியாக இது வெளியாகியுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி காணாது என்பது மட்டுமல்ல அது நடப்பு நிதியாண்டில் 5 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது என்றும், ஸ்டேட் வங்கி ஆய்வுப் பிரிவு பொருளாதாரம் 6.8 சதவீதம் சுருங்கும் என்று கணித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 25 சதவீதம் என்ற அளவில் சுருங்கும் என்ற கிரிசில் நிறுவனக் கணிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மோசமான பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவை இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 1958, 1966, 1980 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை இந்தியாவைத் தாக்கியதாக குறிப்பிடும் இந்த செய்தியில், அந்த மூன்று மந்த நிலையுமே பருவமழை பொய்த்துப்போனதால் ஏற்பட்டதாகவும், அந்த மூன்று நிகழ்விலும் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துபோனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதம் பங்களிக்கும் வேளாண்மைத் துறை இந்த முறை, பொருளாதாரம் சந்திக்கப் போகும் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் உற்பத்தி செய்யும். மழை ஒழுங்காகப் பெய்தால், வேளாண்மைதான் பொருளாதாரத்தை 'காத்து நிற்கும் ஒரே விஷயமாக' மாறும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முந்தைய மூன்று மந்த நிலையும் வேளாண் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முறை வழக்கம்போல மழை பெய்து, வழக்கம்போல சுமார் 2.5 சதவீத வளர்ச்சியை வேளாண்மை எட்டினால், வேளாண்மை அல்லாத தொழில்களால் ஏற்படும் மந்த நிலையை வேளாண்மையே மட்டுப்படுத்தும் என்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
- இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் - 12,000 கிமீ தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்
- நீங்கள் வளர்க்கும் பூனை உங்களை நேசிக்கிறதா? என்ன செய்தால் பூனைக்கு பிடிக்கும்?
- இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்?
- வறுமை, ஊரடங்கு, வேலையின்மை: ஒரு மாற்றுத்திறனாளியின் நடைபயணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
































