மோதியின் 2.0: இந்தியாவுக்கு வெளியுறவில் ஏற்பட்டது சோதனையா? சாதனையா?

மோதி
    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் மோதியின் தலைமையிலான இரண்டாவது பாஜக ஆட்சிக்காலம் ஒராண்டை பூர்த்தி செய்யவிருக்கும் நிலையில், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும்போது, தற்போது வெளியுறவுக் கொள்கையில் ஏதேனும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதா? கொரோனா வைரஸ் உலகத் தொற்றுக்குப் பிறகு மீதமுள்ள நான்கு ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலகின் சக்திமிகுந்த நாடாக உருவாகுமா?

இது பற்றிய ஓர் ஆய்வு:

இந்த ஓராண்டில் எந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஓராண்டில் ஏற்பட்ட சில புதிய போக்குகளை ஆராயலாம். மோதி தலைமையிலான இரண்டாம் ஆட்சி காலத்தின் முதல் ஆண்டின் சில போக்குகள் இங்கே:

* தற்சார்புக்கான அழைப்பு

* குறைந்துபோன பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள்

* காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரிப்பு

* குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வெளிநாட்டில் கவலை அதிகரிப்பு

* டெல்லியில் நடைபெற்ற கலவரங்களுக்கு வெளிநாடுகளின் கடும் விமர்சனம்

* அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம்

* இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்புணர்வு அதிகரிப்பதாகக் கூறி செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கடுமையான எதிர்வினைகள்

* அண்டை நாடுகளுடனான உறவுகளில் சுணக்கம்

* கொரோனா பெருந்தொற்றை வைத்து அரசியல்

தற்சார்பு

மோதியின் இரண்டாம் ஆட்சியின் முதலாண்டு நிறைவடைவதற்கு முன்னதாகவே பிரதமரின் பேச்சுக்களில் 'தற்சார்பு' என்ற புதிய சொல் இடம்பெறத் தொடங்கியது. மே 12 ஆம் தேதியன்று அவர் நாட்டிற்கு ஆற்றிய 33 நிமிட உரையில் 'தற்சார்பு' என்று பொருள் தரும் ஆத்மநிர்பர் என்ற இந்தி மொழிச் சொல்லை 33 முறை பயன்படுத்தினார். 'தற்சார்பு', என்பது சுதேசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அது மாறிவரும் பொருளாதாரக் கொள்கையை நோக்கிச் நகர்கிறது. ஆனால் பரஸ்பர சார்பு கொண்ட தற்போதைய உலகில், பாதுகாப்புவாதக் கொள்கையாக 'தற்சார்பு' என்பதை பின்பற்றி எந்த பெரிய பொருளாதாரமும் வெற்றிபெற முடியாது.

கொரோனா வைரஸ் அழிக்கப்பட்ட பின்னர், உலகில் புதிய ஒழுங்கை நிறுவுவதற்கான சாத்தியங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டன. தற்சார்பு அடைவது என்பது ஒரு வரலாற்று மாற்றம் என்கிறார் இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் முன்னாள் இணையமைச்சர் எம்.ஜே. அக்பர். "(புதிய) உலக ஒழுங்கு என்பது சார்புநிலையை மையமாக கொண்டிருக்கக் கூடாது. அது புதிய பொருளாதார அடிமைத்தனத்தை ஏற்படுத்தும். முன்பு, கோதுமை, அரிசி மற்றும் தானியங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொண்டிருந்தோம். 1967-68ல் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டபோது, நாம் சிரமப்பட்டோம். ஆனால் நமது விவசாயிகள் நம்மை தற்சார்பு உள்ளவர்களாக மாற்றினார்கள், அதையடுத்து இப்போது நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம்" என்று எம்.ஜே.அக்பர் கூறுகிறார்.

கொச்சி மெட்ரோ

"இந்தியாவிடம் இருந்து எந்தப் பொருட்களையும் வாங்கப்போவதில்லை என்று கூறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தார். பிறகு தேவையின் இக்கட்டான நிலையை உணர்ந்து, யாரிடமும் சொல்லாமல் இந்தியாவிடம் இருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டார்" என்று எம்.ஜே. அக்பர் மருத்துவத் துறையில் இந்தியாவின் தன்னிறைவு தரும் விளைவை சுட்டிக்காட்டுகிறார்.

அண்மையில் தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளிடையே உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ருங்கலா, "ஒருபுறம் நாம் உலகத்துடன் இணைந்திருக்கிறோம், ஆனால் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாம் தன்னிறைவு அடைய வேண்டும். அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி இந்தியா தற்சார்பு பெற வேண்டும் என்று கூறினார். தற்சார்பைப் பற்றி பேசுவதால், நாம் சுயநலமாக மாறிவிட்டோம் என்றோ, உலகத்திலிருந்து துண்டிக்கப்படுவோம் என்றோ பொருளில்லை. தன்னிறைவு பெற்ற இந்தியா இயற்கையாகவே சர்வதேச இந்தியாவாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறைந்தது

மோடி

மோதி அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில் பிரதமர் அதிக அளவிலான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அதாவது கடந்த ஒரு வருடத்தில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

கொள்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய முதல் சில ஆண்டுகள் செலவிடப்பட்டதாக எம்.ஜே.அக்பர் கூறுகிறார். அதுமட்டுமல்ல, நேபாளம், வளைகுடா நாடுகள் என அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் எந்த பிரதமரும் பல ஆண்டுகளாக பயணம் மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மோதியின் தலைமையிலான முந்தைய மத்திய அரசில் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த அக்பர். எனவே, அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோதி முயற்சிகளை மேற்கொண்டார். அதுமட்டுமல்ல, இந்தியாவுடன் பாரம்பரிய உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கோ அல்லது இந்தியப் பிரதமர்கள் பயணம் மேற்கொள்ளாத நாடுகளுக்கோதான் பிரதமர் பெரும்பாலும் பயணம் மேற்கொண்டார் என்பதையும் எம்.ஜே. அக்பர் குறிப்பிடுகிறார்.

வெளிநாட்டு விவகாரங்களில் வல்லுநரான பிரெஞ்சு பத்திரிகையாளர் முசின் எனாமியின் கருத்துப்படி, "மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால், அனைத்து நாடுகளும் இந்தியாவை கூர்ந்து கவனிக்கத் தொடங்கின. இந்தியாவிடம் சிறிய நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவுடனான எங்கள் நாட்டின் உறவுகள் நெருக்கமாகியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர வணிகம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது ".

பிரிட்டன் பத்திரிகையாளர் வனேசா வாரிக் பல ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வருகிறார். அவரது கருத்துப்படி, மோதியின் முதல் ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டு பயணங்கள் அதிகமாக இருந்தபோது, அவரைப் பற்றி உலக அளவில் அனைவரும் பேசினார்கள். அவர் பயணித்த எல்லா நாடுகளிலும் புலம்பெயர் இந்தியர்கள் அவரை வரவேற்ற விதம் பாராட்டத்தக்கது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில், அவரது பயணங்கள் குறைந்துவிட்டன, இந்தியாவுக்குள் நடைபெற்ற சில விஷயங்கள் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளன."

காஷ்மீர்

காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முழு மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் உலகின் பார்வை விழுந்தது. இந்தியாவின் செயலுக்கு பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டது. ஆனால் அதற்குள் இந்தியாவின் மீதான நம்பகத்தன்மை வலுப்பெற்றுவிட்டது, பெரிய நாடுகள் பாகிஸ்தானுக்கு செவிசாய்க்கவில்லை. சர்வதேச ஊடகங்களில் காஷ்மீர் பற்றிய விவாதம் சில நாட்களுக்கு தொடர்ந்தது, பல சர்வதேச ஊடகங்களும் மோதி அரசை கடுமையாக விமர்சித்தன.

இந்தியாவில், இது மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் வெளிநாட்டினரின் கருத்து

இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது என்றும், அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவதாகவும் கூறி, டிசம்பர் மாதம் நாடாளுமன்றம் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததன. என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவேடு) மற்றும் என்.பி.ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) ஆகியவற்றுடன் சி.ஏ.ஏவையும் பயன்படுத்தி முஸ்லிம்கள் குறிவைக்கப்படலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்தது.

Banner image reading 'more about coronavirus'

இதற்காக மோதி அரசுக்கு சர்வதேச அளவில் நிறைய அழுத்தங்களும் கொடுக்கப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக சி.ஏ.ஏ விவகாரத்தில் இந்தியா அப்பட்டமாக பாகுபாடு காட்டுவதாக கூர்மையான வார்த்தைகளில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த இந்தியா, இது தனது "உள் விவகாரம்" என்றும், தன்னுடைய உள்நாட்டு விவகாரங்களில் எந்த வெளிநாட்டின் அரசோ அல்லது நிறுவனமோ தலையிட வேண்டிய தேவையில்லை என்றும் கூறிவிட்டது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நரேந்திர நாகர்வால், சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், இந்த சட்டம் வெளிநாடுகளில் இந்தியாவின் பிம்பத்தைக் கெடுத்துவிட்டது என்று கூறுகிறார். இது பற்றிக் குறிப்பிடும் அவர், "சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் நிலையான வெளியுறவுக் கொள்கை பற்றியும், சி.ஏ.ஏவுக்குப் பின்னர் அதில் ஏற்பட்டுள்ள உலக அளவிலான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தின. முக்கியமான பிரச்சனை என்னவென்றால், இந்தியா மெதுவாக உலகளாவிய தனிமையை நோக்கி நகர்கிறது, இந்தியாவின் நம்பகமான நட்பு நாடுகள், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிட்டன. இந்தியாவின் அரசியலமைப்பு உறுதிப்பாடும் கேள்விக்குள்ளாகியுள்ளது " என்று தெரிவிக்கிறார்.

டெல்லி கலவரங்கள் மற்றும் வெளிநாடுகளின் எதிர்வினைகள்

டெல்லி

மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மது, சி.ஏ.ஏ மற்றும் டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பாக இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்தார். அதுமட்டுமல்ல, அவர் ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் தெரிவித்த கருத்து, மோதி அரசுக்கு அதிருப்தியைக் கொடுத்திருந்தது.

டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட ட்வீட், இந்திய அரசிற்கு எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இரான், மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் கடுமையாக கண்டனங்களை வெளியிட்டன. வங்கதேசத்தில் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்தியாவில் நிலவும் தனது முஸ்லீம்-விரோத பிம்பம் ஒரு உள்நாட்டு அரசியல் சதி என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட, நரேந்திர மோடி எப்போதுமே வளைகுடா நாடுகளுடனான தனது நல்லுறவை பேணுகிறார். இந்திய வரலாற்றிலேயே, வளைகுடா நாடுகளுடன் தனக்குத்தான் சிறந்த உறவு இருப்பதாகவும், மாலத்தீவு மற்றும் பஹ்ரைன் நாடுகள், தனக்கு உயரிய விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறுகிறார். ஆனால் டெல்லி கலவரத்தின் போது முஸ்லிம்களை குறிவைத்தது தொடர்பாகவும், தற்போது கொரோனா வைரஸ் உலகத் தொற்று சமயத்திலும் இஸ்லாமியர்களை இலக்கு வைத்தது தொடர்பாகவும் வளைகுடா நாடுகளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவற்றை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டதா இல்லையா என்பதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தெரியவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தியப் பயணம் மோதியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் ஆண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். வாஷிங்டனில் உள்ள இந்திய வம்சாவளிப் பத்திரிகையாளர்களின் கருத்துப்படி, டிரம்ப்பின் வருகை இந்தியாவின் ராஜீய வெற்றி. இது மோதியின் மிகச் சிறந்த சாதனை என்று வாஷிங்க்டனில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சிதானந்த் ரஜ்கட்டா என்ற பத்திரிகையாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் இந்தியா வருகை

இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது, அதை அறிவித்த டிரம்ப், "இந்தியாவுக்கு அப்பாச்சி மற்றும் எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 3 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்கிறோம். இந்த ஒப்பந்தங்களுடன், பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துகிறோம்" என்று தெரிவித்தார். மேலும், "பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இரு நாடுகளும் தோளோடு, தோள் சேர்ந்து பணியாற்றுவதற்காக எங்கள் கூட்டு பாதுகாப்பு திறனை மேம்படுத்துகிறோம்" என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.

உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருந்த சமயத்தில் ஆமதாபாத்தில் பிரம்மாண்டமான கிரிக்கெட் அரங்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்றுக்கூடி அமெரிக்க அதிபரை வரவேற்றனர். அது, இரு தலைவர்கள் மீதான விமர்சனத்திற்கு காரணமானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்கள் என்று அழைத்துக் கொண்டாலும், அமெரிக்க அதிபரின் மனக்கசப்பை இந்திய பிரதமர் அறிந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் என்று கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி மீதான தடையை அகற்ற வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்தார். இந்தியா தயங்கியபோது,டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதான கோபத்தை வெளிப்படையாக கொட்டியதோடு, தடையை அகற்றாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார். அதன்பிறகு, உடனடியாக அமெரிக்காவிற்கு மருந்துகளை அனுப்புவதாக மோதி அரசு அறிவித்ததை அடுத்து, அந்த விவகாரம் அப்படியே விடப்பட்டது.

வளைகுடா நாடுகளின் மனத்தாங்கல்

கொரோனா வைரஸ் பரவியதில் தப்லிக் ஜமாத்தின் பங்கைத் தொடர்ந்து, இந்தியாவில் எழுந்த முஸ்லிம் எதிர்ப்பு சம்பவங்களால் வளைகுடா நாடுகளில் வலுவான எதிர்வினைகள் தோன்றின. சமூக ஊடகங்களில் முஸ்லீம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை எழுதிய சில இந்திய இந்துக்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பிபிசியுடன் பேசிய அந்நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷாஜாதி ஹிந்த், இந்த நிகழ்வுகள் தனக்கு கவலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார், ஏனெனில் அவரது பார்வையில் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு, இதுபோன்ற சம்பவங்கள் தனது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். "இரு நாடுகளுக்கிடையிலான உறவு மோசமடைவது குறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இங்குள்ள தனியார் வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட் துறை, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்" என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுடனான உறவில் சுணக்கம்

மோடி மற்றும் நேபாள பிரதமர்

மோதி தலைமையினான அரசின் இரண்டாம் பதவிகாலத்தின் முதல் ஆண்டில், அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனாவுடனான உறவுகள் மோசமடைந்து வருகின்றன. நேபாளம் அண்மையில் வெளியிட்ட தனது நாட்டின் வரைபடத்தில், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பகுதிகளாக இந்தியா குறிப்பிடும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் நிலப்பரப்பை நேபாளத்தின் வரைபடத்தில் சேர்க்கும் தவறை செய்யக்கூடாது என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. நேபாளத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் முன்வந்துள்ளது. இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் சாலையை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் திறந்து வைத்த பின்னர் நேபாளம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்த சாலை கடந்து செல்லும் பகுதி நேபாளத்தின் பகுதி என்று அந்நாடு உரிமை கோருகிறது.

இந்தியா சீனாவின் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளதும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மோதியின் இரண்டாம் ஆட்சிக் காலத்தின் முதல் ஆண்டின் இறுதியில், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான ஓ.ஐ.சியில் பாகிஸ்தானுக்கு எதிராக மாலத்தீவு இந்தியாவை ஆதரித்தது ஒரு நல்ல செய்தியாகும்.

ஆனால் மீதமுள்ள ஆட்சிக்காலத்தில், அண்டை நாடுகளுடன், குறிப்பாக நேபாளம் மற்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவது பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

தற்போதைய உலகத் தொற்று காலத்தில், பிரதமர் ஜி 20 நாடுகளுடன் தொடர்பு கொண்டதுடன், அண்டை நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுமட்டுமல்ல, கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியா 133 நாடுகளுக்கு மருந்துகளை வழங்கியதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மோதி அரசாங்கத்தின் மீதமுள்ள நான்கு ஆண்டுகளில், வரவிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில், வெளியுறவுக் கொள்கையில் நெகிழ்வுத்தன்மையைக் காண்பிப்பது அவரது முயற்சியாக இருக்கும். 21 ஆம் நூற்றாண்டில், உலகை வழிநடத்தும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று எம்.ஜே. அக்பர் கூறுகிறார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இதுவே பிரதமரின் பிரதான முயற்சியாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: