வனத்துறை அழைத்துச் சென்ற தென்காசி விவசாயி உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு

மனிதன் சித்தரிப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது

தென்காசி மாவட்டத்தில் வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த விவசாயியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. இவர் வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். அவர் தனது நிலத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்தது குறித்து விசாரிப்பதற்காக ஜூலை 22ஆம் தேதியன்று இரவு கடையத்தைச் சேர்ந்த வனத்துறையினர் சிவசைலம் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதற்குப் பிறகு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக்கூறி தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அணைக்கரை முத்து

நீதித் துறை நடுவர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் விவசாயியின் உடலில் 18 வெளிப்புறக் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதற்குப் பிறகு முத்துவின் உடல் ஜூலை 23ஆம் தேதியன்று இரவு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது மனைவி பாலம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தடய அறிவியல் துறையின் தலைவர் இல்லாமல் முந்தைய பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது என்பதால், தடய அறிவியல் குழுவினரைக் கொண்டு மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தொடர்புடைய வனத் துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யவும் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும் தனது மனுவில் பாலம்மாள் கோரியிருந்தார்.

இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, முத்துவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில், அவரது உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என நீதிபதி குறிப்பிட்டார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பொங்கியப்பன், உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர், பேராசிரியர் ஒருவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர் அடங்கிய மூவர் குழு இந்தப் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: