குட்கா விவகாரம்: தி.மு.கவுக்கு சட்டமன்ற உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
தமிழக சட்டப்பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்ததாகக் கூறி 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, மாவா போன்ற போதைப்பொருள் கலக்கப்பட்ட பாக்கு வகைகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது குறித்தும் அதற்கு காவல்துறையினர் ஆதரவாக இருப்பது குறித்தும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேசினர்.
2017ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி இது தொடர்பாக அவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள், இதற்கு ஆதாரமாக அந்தப் பாக்குகளின் பாக்கெட்களை சட்டப்பேரவைக்கு எடுத்துவந்து காண்பித்தனர்.
ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்திருப்பதால், அவையின் மாண்பு குலைவதாகக் கூறிய சபாநாயகர் தனபால், விவகாரத்தை உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்தார்.

பட மூலாதாரம், MAIL TODAY
ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமைக்குழு, இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் சென்னை உயர்நீதின்றத்தை அணுகினர். வழக்கு முடியும்வரை உரிமைக் குழு நோட்டீஸிற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் குட்கா விவகாரத்தை சபாநாயகர் உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும் தி.மு.க. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக தனி நீதிபதிகள் முன்பாக விசாரிக்கப்பட்டுவந்தது. 2017ஆம் ஆண்டு 7ஆம் தேதி இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு பல்வேறு நீதிபதிகள் முன்பாக விசாரிக்கப்பட்ட வழக்கு இறுதியாக தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குட்கா பொருட்கள் தமிழ்நாட்டில் தாராளமாகக் கிடைப்பதைத் தெரிவிப்பதுதான் தி.மு.க. உறுப்பினர்களின் நோக்கம். ஆகவே இந்த நோட்டீஸ் செல்லாது என தி.மு.க. சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்ததன் மூலம் அவையின் கண்ணியத்தைக் கெடுத்தார்கள். எனவே நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ஏற்கனவே அளிக்கப்பட்ட நோட்டீஸ் விதிகளின்படி இல்லை. ஆகவே அந்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. சட்டமன்ற உரிமைக் குழு விரும்பினால் புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
































