மதுரா கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி: இடிக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது சிவில் நீதிமன்றம்

பட மூலாதாரம், KRISHNA JANMABHOOMI
உத்தர பிரதேச மாநிலத்தின் மதுராவில் இந்துக்கள் கடவுளாக போற்றும் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் 17ஆம் நூற்றாண்டு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடிக்க அனுமதி கோரிய மனுக்களை அங்குள்ள உள்ளூர் சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு விதிகள் சட்டப்படி இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி சாயா சர்மா நிராகரித்துளளார்.
இது தொடர்பான மனுக்களை, லக்னெள குடியிருப்புவாசியான ரஞ்சனா அக்னிஹோத்ரி, டெல்லியைச் சே்ரந்த பர்வேஷ் குமார், பகவான் கிருஷ்ண விராஜ்மன்ஹாத் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்தனர். மதுராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதி கட்டப்பட்டிருப்பதால் அதையம் அதைச் சுற்றிய ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
மேலும், மனுவில் மதுரா நகரின் கேஷவ் தேவ் காத்ராவில் உள்ள எண். 255 பகுதியில் சுன்னி வக்பு வாரியத்தின் அனுமதியுடன் அந்த கட்டுமானத்தை எழுப்ப ஈத்கா மசூதி அறக்கட்டளை அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதேவேளை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்து சட்டத்தின்படி, கோயில் வழிபாட்டுத்தலத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள எந்தவொரு கட்டுமானமும் ஆலயத்துக்கே சொந்தம்.அது அழிக்கப்படவோ அகற்றப்படவோ கூடாது. ஆனால், மதுராவை முகலாய ஆட்சியாளர் ஒளரங்கசீப் ஆக்கிரமித்தபோது, அந்த நிலத்தில் உள்ள ஆலயங்களை அவர் அழித்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கிருஷ்ண ஜென்ம பூமி இடத்தை மீட்கவும், அறக்கட்டளை சொத்துகளை பராமரிக்கவும் முடியாத நிலை ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு ஏற்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது மசூதியை இடிக்க உரிமை கோரும் விவகாரத்தில் 1968ஆம் ஆண்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கம் என்ற அமைப்புக்கும், ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதில் இரு தரப்பும் பரஸ்பரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அந்த சொத்துகளை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்யக்கோரி மனுவில் கோரப்பட்டிருந்தது. ஆனால், இந்த கோரிக்கைகள் அனைத்தையம் விசாரிக்கும் வரம்பு கிடையாது என்று கூறி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரா ஆலய பூஜாரிகள் அமைப்பான அகில இந்திய தீர்த்த புரோஹித மஹாசபாவின் தலைவர் மகேஷ் பாதக், "எங்களைப் பொருத்தவரை, மதுராவில் கோயில் நிர்வாகத்துக்கோ மசூதி நிர்வாகத்துக்கோ எந்த பிரச்னையும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் சரி செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு சுமூகமாக இருக்கிறோம். வெளியில் உள்ளவர்கள்தான் இதை பிரச்னையாக்க முயல்கிறார்கள். அயோத்தில் நடந்த சம்பவம், மதுராவில் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- அயோத்தி பாபர் மசூதி சம்பவம்: களத்தில் இறங்கிய "வலிமை பெண்கள்" - சர்சசைகளுடன் போராடிய கதை தெரியுமா?
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்கள் விடுதலை
- கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்து இந்தியா மீது டிரம்ப் கடும் தாக்கு
- ஹத்ராஸ் கூட்டு பாலியல் வல்லுறவு: வலுக்கட்டாயமாக தலித் பெண் உடல் தகனம்
- தமிழ்நாடு சமூக முடக்கம் நீட்டிப்பு: தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் என்ன?
- 50 பெண்களுக்கு மது கொடுத்து மருத்துவமனையில் பாலியல் வல்லுறவு என புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
































