மெரினா கடற்கரையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் மக்கள்

கோப்புப் படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிறு காலை நடைப்பயிற்சியில் பலரும் ஈடுபட்டிருந்த நேரத்தில் புகைப்படக் கலைஞர் ஒருவரை மூன்று சிறுவர்கள் அடங்கிய ஒரு கும்பல் அரிவாளால் தாக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.

மெரினா கடற்கரையில் நடந்த வன்முறையை காட்டும் காட்சியை பதிவிட்டு சென்னையின் பாதுகாப்புக்கு என்ன நேர்ந்தது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு நபரை அரிவாளால் தாக்கியதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். வன்முறையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் பாதிக்கப்பட்ட புகைப்பட கலைஞர் முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த இளமாறன் (23) புகைப்பட கலைஞர். இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு புகைப்படங்கள் எடுத்துவருகிறார். ஞாயிறு காலை மெரினா கடற்கரையில் ஒரு தம்பதியின் திருமண நாளுக்கு போட்டோ எடுக்க வந்துள்ளார். இவருடன் இவரது நண்பர்கள், உதவியாளர்கள் என ஏழுபேர் வந்துள்ளனர்.

இளமாறன், 'நம்ம சென்னை செலஃபீ பாயிண்ட்' பின்புறத்தில் உள்ள மணல் பகுதியில் போட்டோ ஷூட் எடுத்த சமயத்தில், இளமாறனிடம் ஒரு கும்பல் அவர் எந்த ஏரியா என்று கேட்டு தகராறு செய்துள்ளது. அத்துடன் அவரது செல்போனை தருமாறு மிரட்டியுள்ளதாகவும், அவர் செல்போனை தர மறுத்ததால் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளமாறனை அவர்கள் தாக்கியுள்ளனர்.

மெரினாவில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த மெரினா கடற்கரை போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐந்து நபர்களில் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: