ஊழல் புகார் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட, பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கலாமா என்பது குறித்து நான்கு மாதங்களுக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு நான்கு மாதங்களில் முடிவெடுக்காவிட்டால், அனுமதியளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மனு மீது, நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்துள்ளது.
குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதியளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த விதிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஊழல் தடு்ப்புச் சட்டத்தின் கீழ், பொது வாழ்க்கையில் உள்ள ஒருவர் மீது புகார் கொடுப்பது சட்டப்பூர்வ உரிமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது வழக்குத் தொடர அனுமதியளி்க்குமாறு பிரதமருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சுவாமி.
ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு தான் அளித்த கோரிக்கை தொடர்பாக 16 மாதங்கள் ஆன பிறகும் பிரதமர் அலுவலகம் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்ததாக சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணை விவரங்கள் கிடைக்காத நிலையில், சுவாமியின் கோரிக்கை மீது உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவித்த சில கருத்துக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
































