'விஜயகாந்த் 10 நாட்களுக்கு சட்டசபைக்குள் வரத்தடை'

பட மூலாதாரம், dipr
தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே புதன்கிழமை ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ஆவேசமான கருத்துப் பரிமாறல்களை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள முடியாதவாறு தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் அவரது தேமுதிக கட்சி உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து சபாநாயகரின் உத்தரவின்படி விஜயகாந்த் உட்பட தேமுதிக உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த தேர்தலின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதற்காக வெட்கப்படுவதாகவும் ஜெயலலிதா சட்டசபையில் கூறியிருந்தார். முடிந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துநின்று வெற்றிபெறுமாறும் முதல்வர் விஜயகாந்துக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பின்னர் ஊடகங்களிடம் பேசிய விஜயகாந்த், ஆளுநர் ஆட்சியமையுமானால் சங்கரன்கோவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டமுடியும் என்று தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமன்ற உரிமை மீறல் குழு முன்னிலையில் ஆஜராகவேண்டும் என்று சபாநாயகர் கோரியிருந்தார். ஆனால், விஜயகாந்த் அந்தக்குழு முன்னால் ஆஜராகவில்லை.
இந்த நிலையிலேயே விஜயகாந்த், 10 நாட்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.




























