அணு உலை தொடர்பான இழுபறி நல்லதல்ல- ரஷ்யத் தூதர்

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் தங்கள் நாட்டு விஞ்ஞானிகளை காலவரையின்றி கூடங்குளத்திலேயே விட்டுவைத்திருக்கமுடியாது, அவர்களது பணி மற்ற இடங்களிலும் தேவைப்படுகிறது எனக்கூறியிருக்கிறார்.
சொந்த வேலையாக சென்னை வந்துள்ளதாகக் கூறிய அவர், கூடங்குளம் கட்டுமானப்பணிகள் முடங்கிப்போயிருப்பதால் அங்கே பணியாற்றும் ரஷ்ய நிபுணர்கள் எதுவும் செய்ய இயலாமல் அங்கேயே காத்திருக்கின்றனர், இந்நிலை தொடர்வது நல்லதல்ல என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர்களெல்லாம் மிகச் சிறந்த விஞ்ஞானிகள், கூடங்குளத்தில் அமையவிருக்கும் மின் நிலையமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது அதனால் எவருக்கும் எவ்வித ஆபத்துமில்லை. ஆனால் தேவையில்லாமல் விஷமப் பிரச்சாரம் செய்யப்படுகிறது என ரஷ்ய தூதர் குறை கூறினார்.
ஃபுகுஷிமா நிலநடுக்கத்தில் தகர்ந்த அணு உலை அமெரிக்கர்களால் வடிவமைக்கப்பட்டது, அது மிகவும் பழமையானது. அத்துடன் கூடங்குளம் வடிவமைப்பினை ஒப்பிடமுடியாது எனவும் கடாகின் வாதிட்டார்.
ரஷ்யாவின் தொழில்நுட்ப மற்றும் கடன் உதவியின் மூலம் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் உலைக்கான கட்டுமான வேலை முழுவதும் முடிவடைந்துவிட்டது. ஆனால் அங்கே தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இந்த உலையை இயக்க முடியாத சூழல் நீடிக்கிறது.




























