மகள் மீது பாலியல் பலாத்காரம்:பிரெஞ்சு அதிகாரி கைது

பட மூலாதாரம், spl arrangement
தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி பஸ்கால் மசூரியே, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தூதரக அதிகாரி என்பதால், இந்தியாவின் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டாதாலேயே அவரை கைது செய்யும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அச்சிறுமியின் தாய் இந்த மாதம் 13 ஆம் தேதியே காவல்துறையில் இது தொடர்பில் புகார் அளித்திருந்தாலும், அந்த அதிகாரி இன்றுதான்(19.6.12) கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சிறுமி பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர் எனவும், அதன் காரணமாக மேலதிக விசாரணைகள் அல்லது நடவடிக்கைகளுக்காக தமது மகள் பிரான்ஸ் அழைத்துச் செல்லப்படக் கூடும் என்று அவரது தாய் கவலை வெளியிட்டுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே கர்நாடக மாநில சிறார் நல ஆணையத்தின் தலைவி மீனா நாயக், பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சிறுமியின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவிலுள்ள அரசு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்தச் சிறுமிக்கு தற்போது மருத்துவர்கள் மனநல ஆலோசனைகளை வழங்கி அதிர்ச்சியிலிருந்து அவரை மீட்டு வருவதாகவும் மீனா நாயக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியச் சட்டங்களின் கீழேயே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
































