இன்ஃபோஸிஸ் தலைவராக மீண்டும் நாராயண மூர்த்தி நியமனம்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோஸிஸின் தலைவர் பொறுப்பை நாராயண மூர்த்தி மீண்டும் ஏற்றுள்ளார்.
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவானது, நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவரும் அதன் நெடுநாள் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவருமான நாராயண மூர்த்தியை நிறுவனத்தின் சேர்மனாக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.
நாராயணமூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்தி தனது தந்தையின் செயல் உதவியாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சேர்மன் பதவியை ஏற்றிருந்த காமத் என்பவருக்கு தலைமை சுயாதீன இயக்குநர் (Lead Independent Director) என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட இணைத் தலைவராக (Executive Co Chairman) இருந்துவருகின்ற எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைவர் (Executive Vice Chairman) என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தலைமை நிறைவேற்று அதிகாரி (Chief Executive Officer) பொறுப்பில் உள்ள சிபுலால் அதே பொறுப்பில் நீடிப்பார் என்று தெரிகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீஸுக்கு (TCS) இணையாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்துவந்த இன்ஃபோசிஸ், கடந்த சில ஆண்டுகளாக சரிவைக் கண்டுவருகிறது.
காக்னிசண்ட் (Cognizant) நிறுவனம் இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்ட நிலையில், இன்ஃபோஸிஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கணிக்கப்பட்ட வளர்ச்சியில் பாதியளவை மட்டுமே தற்போது அந்த நிறுவனத்தால் எட்ட முடிந்துள்ளது.
இந்நிலையில் சரிவிலிருந்து நிறுவனத்தை மீட்பதற்காக நாராயணமூர்த்தி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
































