"தேவயானிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படாது "

தேவயானி கோப்ராகடே மீதான வழக்கை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும், அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா திரும்பத் திரும்ப கூறி வந்தாலும், தேவயானி மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று அமெரிக்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை அவர் கொடுக்கவில்லை என்றும், அது தொடர்பில் விசா விண்ணப்பத்தில் அவர் கூறியிருந்ததை கடைபிடிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
நியூயார்க்கில் உள்ள இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்து கொண்டிருந்த தேவயானி கோப்ராகடே, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாயின. பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார்.
தேவயானிக்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 13 ஆம் தேதிக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும். அவருக்கு எதிரான பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியன்னா ஒப்பந்தம்

இதற்கிடையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்ஸி பவல் தனது புத்தாண்டு செய்தியில், தானும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியும் இந்தியத் தூதர் கைது செய்யப்பட்ட சூழல் குறித்து வருந்துவதாக மட்டுமே தெரிவித்துள்ளார்.
தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுவது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.
எனினும் இந்த விவகாரம் இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான்சி பவல் தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜதந்திரிகளுக்கு, உள்நாட்டு சட்ட முறைகளில் இருந்து வியன்னா ஒப்பந்தம், வழக்கு விலக்கு அளிப்பதாகவும், எனவே இந்தியத் தூதர் மீது அமெரிக்க சட்டத்தை பிரயோகிக்கக் கூடாது என்றும் இந்தியா வாதிடுகிறது.
ஆனால் இந்தியாவின் தூதராக இருப்பவர் மட்டுமே வியன்னா ஒப்பந்தத்தின் படி முழு வழக்கு விலக்கு பெறத் தகுதியானவர் என்றும் மற்ற அதிகாரிகளுக்கு அலுவல் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே வழக்கு விலக்கு கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
வீட்டுப்பணிப் பெண்ணுக்கு குறைவான சம்பளம் கொடுப்பது அலுவல் தொடர்புடைய வேலையல்ல, எனவே இந்தக் குற்றம் தொடர்பாக தேவயானி மீது வழக்கு தொடரலாம் என்கிற நிலையை அமெரிக்கா எடுத்துள்ளது.





























