நீதிபதிகள் நியமன வழக்கு:உச்சநீதிமன்றம் விசாரிக்கும்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலை திரும்ப பெறக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடை இன்று நீக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தாக்கல் செய்த மேல்முறையீடு இன்று நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், செல்லமேஸ்வர் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் வாகனவதி ஆஜராகி வாதாடுகையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிட கோரினார். அதே போல் இது போன்ற வழக்கில் தகுதியற்றவருக்கு பரிந்துரை அளிக்கப்படிருந்தால் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதாகவும் இந்த நியமனங்களில் இடஒதுக்கீடு கோருவது சரியில்லை என்றும் தெரிவித்தார்.
நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சட்ட அமைச்சகம் ஆகியோர் நான்கு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க கோரியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறாது. உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் முன்பு இது விசாரிக்கப்படும் என்று செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் போது, நியமனத்திற்காக சிபாரிசு செய்யப்பட்டோர் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
அதோடு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறியிருந்தனர்..
இந்த நீதிபதிகள் நியமன வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான பொது நலன் வழக்கை வழக்கறிஞர் ஆர்.காந்தி தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிபதி நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் பல சர்ச்சைகள் தொடர்ந்து வருவதால் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
































