பழங்குடிப் பெண் மீது பாலியல் கொடூரம்: நீதிபதி விசாரணைக்கு உத்தரவு

பட மூலாதாரம், AP
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆண் ஒருவரை காதலித்த பழங்குடிப் பெண்ணை, கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி கும்பல் ஒன்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சம்பவத்தை நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவலை தரக்கூடிய சம்பவம் என்று இதை விபரித்துள்ள உச்ச நீதிமன்றம், குறித்த பிர்பம் என்ற கிராமத்தின் மாவட்ட நீதிபதி இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கிராமத்தின் தலைவர் உட்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகளான ரஞ்சன் கொகோய் மற்றும் இக்பால் ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 31-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கும் வெளி சமூகத்து ஆணுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக காதல் உறவு இருந்துவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று, திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்பதற்காக அந்த பெண்ணின் வீட்டுக்கு அந்த நபர் வந்ததைக் கண்டதும் கிராமத்தினர் தங்களின் கட்டப் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளதாக பிர்பம் காவல்துறை உயர் அதிகாரி சி.சுதாகர் பிபிசியிடம் கூறினார்.
'அபராதம் கட்டாதபடியால் தண்டணை'

பட மூலாதாரம், Reuters
காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு கிராமத்தின் தலைவர் 25,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத் தொகையை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
பின்னர், அந்த பெண்ணின் தூரத்து உறவினரான குறித்த கிராமத்தின் தலைவர் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் தற்போது காவல்துறையின் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம் இந்தியாவில் பல தரப்பினரிடையேயும் எதிர்ப்பையும் சீற்றத்தையும் எழுப்பியுள்ளது. குறித்த மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியை மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ பதவி நீக்கம் செய்துள்ளார்.
இழந்த மரியாதையை மீட்பதாகக் கூறி, தவறிழைக்கும் காதல் ஜோடிகளை கொலைசெய்ய இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள் அனுமதி அளிப்பது என்பது அடிக்கடி நடக்கும் செயலாக நீடிக்கிறது.
2012 ஆம் ஆண்டில், டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி பலியான சம்பவம் இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
































