சென்னை பட்ஜெட்: புதிய தொழில்களில் அரசு இறங்குவது நல்லதா?

பிரசுரிக்கப்பட்டது
மலிவு விலை உணவுக் கடைகளை தமிழக அரசு நடத்திவருகிறது.
படக்குறிப்பு, மலிவு விலை உணவுக் கடைகளை தமிழக அரசு நடத்திவருகிறது.

சென்னை மாநகராட்சியின் 2014-15 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை புதனன்று தாக்கல் செய்யப்பட்டது.

பல்வேறு நலத்திட்டங்களுடன், மலிவு விலையில் திரையரங்குகள், தங்கும் விடுதி, வாரச்சந்தை போன்ற புதிய தொழில்களை மாநகராட்சி ஏற்று நடத்தவுள்ளதாக மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா காய்கறிக் கடை போன்ற பெயர்களில் பல்வேறு தொழில்களை நடத்திவருகின்ற அதிமுக அரசாங்கம், அப்போக்கை விரிவுபடுத்தும் விதமாக திரையரங்கம் அமைப்பது உள்ளிட்ட தொழில்களில் இறங்கவிருப்பது, தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு நன்மை தருமா என்பது தொடர்பில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி மையத்தில் பொதுத்துறை நிதி நிர்வாக துறையில் நிபுணராக விளங்கும் பேராசிரியர் சண்முகம் கருத்து வெளியிட்டார்.

நலத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதில் தவறு இல்லை என்றும், ஆனால் அவற்றின் நிதி நிர்வாகம் முறையாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என்பது முக்கியம் என்றும் பேராசிரியர் சண்முகம் கூறினார்.

அம்மா உணவகம் திட்டத்தினால், ஏழை மக்கள் குறைந்த விலையில் அன்றாட உணவை சாப்பிட முடிந்துள்ளது என்றும், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு இத்திட்டத்தால் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்களை வழங்கும் தொழில்களில் அரசாங்கம் ஈடுபடுவது ஏற்புடையதாயினும், திரையரங்கம் நடத்துவது போன்ற பொழுதுபோக்கு அம்சத் தொழிலில் அரசாங்கம் ஈடுபடுவது பொருத்தமாக இல்லை என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று அவர் சொன்னார்.

ஆனால் சென்னை போன்ற ஊர்களில் மலிவு விலை திரையரங்குகள் இல்லாத நிலையில், ஏழை மக்களால் திரையரங்கம் சென்று சினிமா பார்க்க முடியாத சூழல் உள்ளது என்றும், இதனால் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கிறது என்றும், ஏழைகளுக்கு வசதி செய்து தருவதற்காகவே இத்தொழிலில் இறங்கியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தருகின்ற விளக்கத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.