ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தமிழக அரசு மனு

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தமிழக அரசு மனு
படக்குறிப்பு, ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தமிழக அரசு மனு
பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவை ஆதாரமற்றவை என்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மே மாதம் 3 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர்பான பிசிசிஐ வழக்கில் தம்மையும் இணைத்துக்கொள்ளும்படி கோரும் மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்திருக்கிறது. அதில் தமிழக அரசை உட்படுத்தாமல் தமிழ்நாடு காவல்துறைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை சம்பத் குமார் முன்வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசையோ, சிபிசிஐடி காவல்துறையினரையோ மேற்கோள் காட்டாமல் சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி செல்வதாகவும் தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தமிழக சிறப்பு சிபிசிஐடி சென்னை பிரிவின் புலனாய்வு குழுவில் தான் இருந்ததாகக் கூறும் ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத் குமார், கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அன்று ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் எனக் கோரி சம்பத்குமார் உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சிறப்பு சிபிசிஐடி சென்னை பிரிவின் புலனாய்வுக் குழுவில் தான் இருந்ததாகவும், பின்னர் காரணமின்றி தான் குழுவை விட்டு நீக்கப்பட்டு பின்னர் பணியிலிருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்த மனுவில் சம்பத்குமார் தெர்வித்திருந்தார். சென்னை காவல்துறை இந்த ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் ஒரு சுதந்திரமான, நியாயமான முறையில் விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் சம்பத் குமார் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் தனது மனு நிலுவையில் உள்ளதால் தன் மீது விதிக்கப்பட்ட இடைக்கால பணி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இன்று தமிழக அரசு தொடுத்துள்ள மனுவில் சம்பத் குமார் ஐபிஎல் விசாரணைக் குழுவில் எந்த பங்கும் வகிக்கவில்லை என்றும், சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் கோரியதால் தான் ஜி.சம்பத்குமார் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பத்குமாரின் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் அந்த விசாரணையில் தமிழக அரசின் பங்கு தேவையான ஒன்று என்றும், எனவே தமிழக அரசையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ளும்படி கோருவதாகவும் தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.