இந்திய ராணுவத் தளபதி நியமனம்: 'தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டியதில்லை'

ஓய்வு பெறும் இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங்
படக்குறிப்பு, ஓய்வு பெறும் இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய ராணுவ தளபதி நியமனப் பிரச்சினையில், புதிய அரசாங்கம் பொறுப்பு ஏற்கும் வரை நியமனம் காத்திருக்க தேவை இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தொடர்புடைய புதிய பதவி நியமனம், பதவி உயர்வு, ராணுவத்திற்கான பொருட்களை கொள்முதல் செய்தல் போன்ற விவகாரங்களை, கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மக்களவை தேர்தலுக்கான "மாதிரி நன்னடத்தை விதி மீறல்" கட்டுப்படுத்தாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அத்தோடு மத்திய அரசு விரும்பினால் உடனடியாக புதிய நியமனத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக புதிய தலைமை ராணுவ தளபதியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டுவதாக குற்றம் கூறிய பாரதிய ஜனதா கட்சி, இது தொடர்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் ஒன்றையும் அளித்தது. அந்த புகாரில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு நிதானமாக ராணுவ தளபதியை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்த்து.

மேலும் தற்போதைய, யு.பி.ஏ அரசின் ஆட்சிக் காலம் விரைவில் முடிவு பெற உள்ள சூழலில், உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறை கூறி, அதை தடுத்து நிறுத்த பாஜக வலியுறுத்தியிருந்தது.

தலைமை ராணுவ தளபதியாக பொறுப்பில் உள்ள ஜெனரல் பிக்ரம் சிங் வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறவுள்ளதால்,தற்போதுள்ள மரபுப்படி, இரண்டு மாதங்களுக்கு முன்பே புதிய தளபதியின் பெயர் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு இறுதி செய்யப்படும் பரிந்துரையின்படி தான் புதிய தலைமை ராணுவ தளபதி நியமிக்கப்படுவார்.

ஏற்கனவே வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங்கின் பதவிக் காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, தற்போது ராணுவ தளபதியாக பொறுப்பு வகிக்கும் ஜெனரல் பிக்ரம் சிங்கின் நியமனம் அப்போது நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.