ஸ்டாலின் ராஜினாமா பொய் என்கிறார் கருணாநிதி

ராஜினாமா முடிவை வாபஸ் பெற்ற ஸ்டாலின்
படக்குறிப்பு, ராஜினாமா முடிவை வாபஸ் பெற்ற ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது

கட்சிப் பதவிகளிலிருந்து ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் பொய்யானது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் 36 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த்து. இந்த நிலையில் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று, அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்திருப்பதாக இன்று மதியம் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.

இதையடுத்து, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலிலின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குவிய ஆரம்பித்தனர். அவர் ராஜினாமா செய்யக்கூடாது என முழக்கங்களை எழுப்பினர். அதேபோல, கோபாலபுரத்தில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திலும் மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் குவிந்து, ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலிலின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், “பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ய மு.க. ஸ்டாலின் தலைவரிடம் தெரிவித்தார். அதற்கு தலைவர், அப்படி ராஜினாமா செய்ய இது நேரமும் இல்லை, அதற்குத் தேவையும் இல்லை. கழகத்திற்கு நீ நிறைய பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு தோல்வியால் கழகம் அழிந்துவிடக் கூடியதல்ல. இது ஆண்டாண்டு காலத்திற்கு இருக்கக்கூடியது. பல தோல்விகளைக் கண்டிருக்கிறது. எனவே, இளைஞனாக இருக்கக்கூடிய நீ, வருங்காலத்தில் கழகத்தை வழிநடத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கும் நீ, இத்தகைய முடிவை எடுக்கத் தேவையில்லை என வலியுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகு, இன்று மாலையில் கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ராஜினமா செய்ததாக வந்த தகவல் பொய்யானது என்று தெரிவித்தார். கட்சியின் தோல்விக்கு, ஊடகங்களும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டினார். மு.க. அழகிரியை தானும் கட்சியும் மறந்துவிட்டதாகத் தெரிவித்த கருணாநிதி, கட்சியின் தோல்விக்கு மு.க. அழகிரியின் நீக்கம் காரணமல்ல என்றும் தெரிவித்தார். கட்சியின் தோல்விக்கான காரணங்களைத் தி.மு.க.வின் உயர்மட்டக்குழு கூடி ஆராயும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்டாலின் வீட்டின் முன்பு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த செய்தியாளர்களை அங்கிருந்த தொண்டர்கள் தாக்கத் தொடங்கினர். இதில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஷபீர் அகமது கடுமையாகத் தாக்கப்பட்டார். இதனைப் படம் பிடிக்க முயன்ற ஹெட்லைன்ஸ் டுடே உள்ளிட்ட ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். சிறிது நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். சென்னையில் உள்ள டைம்ஸ் நவ் அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.