நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து : ஒருவர் பலி

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து : ஒருவர் பலி
படக்குறிப்பு, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து : ஒருவர் பலி
பிரசுரிக்கப்பட்டது

நெய்வேலி முதலாவது அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நெய்வேலி முதலாவது அனல் மின் நிலையத்தில் 7 யூனிட்டுகள் இருக்கின்றன. இதில் 7வது யூனிட்டிற்குச் செல்லக்கூடிய நீராவிக் குழாய் இன்று காலை பதினொன்றரை மணியளவில் வெடித்தது.

இதில் அருகில் இருந்த சுவர் போன்ற பகுதி இடிந்துவிழுந்ததில் முதன்மை மேலாளர் செல்வராஜ் என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கியும் நீராவி பட்டும் காயமடைந்தனர்.

இவர்களில் இருவர் நெய்வேலியில் உள்ள மருத்துவமனையிலும் இருவர் புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸிலும் இருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக, சம்பந்தப்பட்ட யூனிட்டில் உற்பத்தியாகும் 100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பராமரிப்பிற்காக மேலும் சில யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தமாக 300 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.