ஆப்கானிலுள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் ஹேரத் மாகாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது இன்று ஆயுததாரிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
எனினும் இதில் உயிரழப்புகள் ஏதும் இல்லை என்றும், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு காவல் கடமையில் இருந்த இந்தோ-திபேத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரும் எதிர்த்தாக்குதலை நடத்தினர் என்றும், அந்த நடவடிக்கை தொடருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வெள்ளியன்று அதிகாலை மூன்று தீவிரவாதிகள், துணைத் தூதரகத்துக்கு அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து தானியங்கித் துப்பாகிகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் வீசப்படும் குண்டுகளைக் கொண்டு தாக்குதலை நடத்தினர் என்று ஆப்கானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் இருவரை தாங்கள் கொன்றுள்ளதாகவும், ஒருவர் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானிலுள்ள இந்தியத் தூதருடன் பேசியதாகவும், அனைத்து உதவிகளை அளிக்க உறுதியளித்துள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்குபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.




























