ஐந்து செய்கோள்களை ஏவியது இந்திய ராக்கெட் சி.23

பட மூலாதாரம், ISRO
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், இன்று ஐந்து வெளிநாட்டுச் செய்கோள்களுடன் , விண்ணில் ஏவப்பட்டது.
சென்னை அருகே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவன் ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சியைக் காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.
பிரான்ஸ், கனடா, ஜெர்மனி , சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டால் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
பல கோடி டாலர்கள் பெறுமதியுள்ள விண்ணில் செய்கோள்களை ஏவும் வர்த்தகத்தில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாக விளங்குகிறது.
இந்த ஏழு-கட்டு உயரமும், 230 டன் எடையுமுள்ள பி.எஸ்.எல்.வி சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது, குழுமியிருந்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும், ஊழியர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
" இந்த ஐந்து வெளிநாட்டு செய்கோள்களை இந்தியா விண்ணில் தனது ராக்கெட் மூலம் ஏவியது, இந்தியாவின் விண்வெளித் திறனை உலகம் அங்கீகரித்தற்கு சாட்சியாகும் " , என்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இது வரை 40 வெளிநாட்டு செய்கோள்கள் உட்பட 67 செய்கோள்களை விண்ணில் ஏவியிருக்கின்றன.
இந்திய விண்வெளி நிறுவனம் 2008ல் ஒரே ஏவலில் 10 செய்கோள்களை விண்ணில் ஏவியிருந்தது.
































