பல்கலைக்கழக நூலகத்தில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் சர்ச்சை

பிரசுரிக்கப்பட்டது

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மைய நூலகத்திற்குள்ளே நுழைய பல்கலைக்கழக மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக அதன் துணை வேந்தர் சமீருதின் ஷா தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவிகள்
படக்குறிப்பு, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவிகள்

இடநெருக்கடியை சமாளிக்கவே மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ அமைப்பினர் வருத்தம் வெளியிட்டுள்ளார்கள்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மைய நூலகத்திற்குள் செல்ல மாணவிகளுக்கு நீண்ட காலமாகவே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்த பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சமீருதின் ஷா கருத்து கூறுகையில், இது ஒழுங்கு நடவடிக்கை தொடர்புடையது இல்லை என்றார்.

மேலும் பெண் மாணவிகள் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அதன் காரணாமாக ஆண் மாணவர்களின் வருகை அதிகரிக்க கூடும் என்றும், அதனால் இடநெருக்கடி ஏற்படாமல் தடுக்கவே இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது வேதனையளிப்பதாக கூறியுள்ள இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மௌலான ஆசாத் நூலகம் என்றழைக்கப்படும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மைய நூலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல் என்றும், பழைய சித்தாந்தத்தின் வெளிப்பாடு தான் இத்தகைய கட்டுப்பாடுகள் என்றும் அந்த பல்கலைக்கழக மாணவிகள் கூறுகிறார்கள்.

மேலும் மாணவ அமைப்பின் தலைவராக செயல்படும் மாணவி குல்ஃப்சியா அந்த நூலகத்திலிருந்து புத்தகங்களை பெறுவதற்கு கூட மாணவிகளுக்கு அவர்கள் அனுமதி வழங்குவது இல்லை என்று பிபிசியிடம் குற்றஞ்சாட்டினார்.