உபியில் மரத்தில் தொங்கவிடப்பட்ட பெண்கள் சம்பவம் "தற்கொலை" :சிபிஐ

பட மூலாதாரம், AFP
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு இளம் பெண்கள் சமீபத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு பின் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த சம்பவத்தில், அந்த இரண்டு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக, சிபிஐ அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதாயுன் மாவட்டத்தில், கடந்த மே மாதம், இரண்டு இளம் பெண்கள்ளின் சடலங்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்தனர்.
அந்த பெண்களின் சடலங்கள் மீது நடத்தப்பட்ட புதிய தடயவியல் சோதனைகளின் முடிவுகள், அந்த பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தன.
சாதிய அமைப்பில் கீழ்நிலைச் சாதியைச் சேர்ந்த அந்த பெண்களின் உடல்கள் கடந்த மே மாதம் 28ஆம் தேதி அன்று மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
14 மற்றும் 15 வயதாகிய அந்த பெண்கள், தங்களின் வீடுகளில் கழிப்பறை இல்லாத காரணத்தினால், மலம் கழிக்க வெளியே சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசிய சிபிஐயின் தலைவர் ரஞ்சித் சின்ஹா, அந்த பெண்கள் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் தங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த சகோதரிகள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தவறுதலாக ஆய்வு நடத்தியதாகவும் அந்த அதிகரி தெரிவித்துள்ளார்.
உடைகள் ,அந்தரங்கப் பொருட்கள் ஆகியவைகளை வைத்து டிஎன்ஏ கைரேகை கண்டறியும்(CDFD) மையத்தின் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் அந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என்று நிரூபணம் ஆகியுள்ளதாக மத்திய புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
































