சமூகநீதி வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு

பட மூலாதாரம், AFP
சமூக நீதி விவாகரங்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க, இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளை உள்ளடிக்கிய சிறப்பு அமர்வு ஒன்று முதல் முறையாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஏற்படுத்தியுள்ள இந்த அமர்வு, பெருகிவரும் பொது நல வழக்குகள் மற்றும் சமூக நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று மதிய வேளையில் கூடும் இந்த அமர்வில், நீதிபதிகள் மதன் பி லோக்குர் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள சமூகநலன் சார்ந்த 200 வழக்குகளில், முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 65 வழக்குகள் மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிமன்ற பதிவகம் தெரிவித்துள்ளது.
உணவு விநியோகத் திட்டம், குடிநீர் தொடர்பான பிரச்சினைகள், மகளிர் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மருத்துவ உதவி ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்களை இந்த அமர்வு விசாரிக்கவுள்ளது.
இத்தகைய நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சமுக ஆர்வலர்கள் இது குறித்தான கருத்து கூறும் போது, நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சமுக பிரச்சனைகளுக்கு தாங்கள் நீதிமன்றத்தை தான் நம்பியுள்ளதாக கூறினார்கள்.
இதனால் நீதிமன்றத்தின் செயல்பாட்டை வேகப்படுத்தும் இது போன்ற நடவடிக்கை தங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள்.




























