நேபாளப் பெண் கொலை; குற்றவாளிகளைத் தேடும் ஹரியானா போலீஸ்

பட மூலாதாரம், Manoj Dhaka
இந்தியாவில் நேபாளப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கற்றல்திறன் குறைபாடுள்ள இந்தப் பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள வெட்டவெளிப் பகுதி ஒன்றிலிருந்து முகம் சிதைந்த நிலையில் குறித்தப் பெண்ணின் சடலம் கடந்தவாரம் மீட்கப்பட்டது.
இந்தப் பெண் காணாமல்போன நாளிலிருந்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
போலீஸாரின் செயலைக் கண்டித்து பிரதேச மக்கள் நெடுஞ்சாலை ஒன்றை மறித்து நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
டில்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி மாணவி ஒருவர் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்து பலதரப்பினரும் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர்.
இதேவேளை, ராஜஸ்தான் மாநிலத்திலும் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா வழிகாட்டியாக உதவ முன்வந்த உள்ளூர்வாசி ஒருவரே அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





























