டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அலை

வெற்றிக் களிப்பில் அரவிந்த் கேஜ்ரிவால்
படக்குறிப்பு, வெற்றிக் களிப்பில் அரவிந்த் கேஜ்ரிவால்
பிரசுரிக்கப்பட்டது

நடந்து முடிந்த டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

டில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியதிலிருந்தே, டில்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்தது.

மதியம் 12 மணி நிலவரப்படி, சுமார் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.

கிரன் பேடி தோல்வி

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக , வெறும் 7 இடங்களிலேயே முன்னிலை வகித்தது. அதன் முதலமைச்சர் பதவி வேட்பாளர் கிரன் பேடி கிருஷ்ணா நகர் தொகுதியில் தோல்வியடைந்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த மே மாதம் நடந்த இந்தியப் பொதுத்தேர்தலில் டில்லியில் உள்ள அனைத்து இடங்களையும் பாஜக வென்றிருந்தது.

நாட்டில் ஊழலுக்கெதிராக இயக்கம் அமைத்து டில்லியில் வாக்காளர்கள் கவனத்தை அரவிந்த் கேஜ்ரிவால் ஈர்த்திருந்தார். அதன் பின், 2013 டிசம்பரில் டில்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் , பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அது ஆட்சி அமைக்க முன்வரவில்லை.

அதன் பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, பின்னர் பதவியேற்ற 49 நாட்களில், ஊழலுக்கெதிரான மசோதவை நிறைவேற்ற முடியாததால் பதவி விலகினார்.