சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

பிரசுரிக்கப்பட்டது

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில் சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என்று கோரும் திமுக பொதுச் செயலர் க.அன்பழகனின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பின் சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகக்கூடாது என வலியுறுத்தி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் குமார், வீரப்பா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஒரு வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஒருவர் நியமிக்கப்பட்டால், வழக்கின் கடைசி வரை அவரே ஆஜராகி வாதிடலாம் என்றும், பவானி சிங் அரசு வழக்கறிஞராகத் தொடர்வதற்கு கர்நாடக அரசின் மறு உத்தரவு தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

தவிர, இந்த மேல் முறையீட்டு மனுவில் ஜெயலலிதா, சசிகலா தரப்பு வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞரை மாற்றினால் வழக்கு மேலும் தாமதமாகும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த இருபத்தி ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது சுதாகரன், இளவரசி தரப்பு வாதங்கள் தற்போது தொடர்ந்து நடந்துவருகின்றன.