ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் 82.54 சதவீத வாக்குப்பதிவு

பட மூலாதாரம், BBC World Service
வெள்ளிக்கிழமையன்று நடந்து முடிந்த ஸ்ரீ ரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 82.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், நகர்ப்பகுதிகளிலும் கிராமப்புரங்களிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆரம்பம் முதலே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர்.
அ.தி.மு.க. சார்பில் எஸ். வளர்மதி, தி.மு.க. சார்பில் என். ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே. அண்ணாதுரை, பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் எம். சுப்ரமணியம் ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டனர்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
வாக்குப் பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஐம்பது மத்திய ஆயுதப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு வெப் கேமராக்கள் மூலம் சென்னையில் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் அலுவலகத்திலும் திருச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் கண்காணிக்கப்பட்டது.
இந்த தேர்தலுக்காக ஸ்ரீ ரங்கம் தொகுதியில் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியான அனில்குமார் இந்தத் தொகுதியின் சிறப்புத் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கட்கிழமையன்று நடக்கவிருக்கிறது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து, தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது.
































