ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு; வாதங்கள் நிறைவடைந்தன
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மேல் முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பின் வாதங்கள் முடிவடைந்தன.

பட மூலாதாரம், BBC World Service
இதையடுத்து வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது வாக்கு மூலத்தை எழுத்து மூலம் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தண்டிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஜனவரி ஐந்தாம் தேதியன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் துவங்கின.
முன்னதாக குற்றவாளிகள் தரப்பும், பிறகு அரசுத் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தார்கள்.
நீதிபதி சி.ஆர். குமாரசாமி முன்னிலையில் 38 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் விரைவில் தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































