உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒத்திவைத்தது தமிழக அரசு
தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வரும் மே மாதம் 23-24ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தவிருந்த 'குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட்' என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒத்திவைத்துள்ளது.

பட மூலாதாரம், BBC World Service
அந்த மாநாடு, செப்டம்பர் மாதம் 9 -10ஆம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை நடத்துவதற்கென 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஃப்ரான்ஸ், பிரிட்டன், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் விளம்பர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சீனா, தைவான் ஆகிய நாடுகளிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தயாராகிவருவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.
சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தாங்கள் செய்யவிருக்கும் பெரிய அளவிலான முதலீட்டை இறுதிசெய்ய இன்னும் சில நாட்கள் கூடுதலாகத் தேவைப்படும் எனக் கூறியதாகவும் வேறு சில முதலீட்டார்கள் கோடை காலம் முடிந்த பிறகு இந்த மாநாட்டை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே, இந்த மாநாடு மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.




























