ஆபாசப் படங்களை எடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் பிரகாஷுக்கு விடுதலை
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, ஆபாசப் படங்களைத் தயாரித்ததாகவும் ஆட்களைக் கடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பிரகாஷை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், BBC World Service
சென்னையைச் சேர்ந்த எலும்பியல் நிபுணரான டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனையில் பணியாற்றியவர்களைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவரால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தப் புகாரின் பேரில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார். முதலில் 2001ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக சரவணன், விஜயன், நிக்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
பிறகு, பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டன.
விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தவதைத் தடுக்கும் சட்டம், ஆட்கடத்தல், தகவல்தொழில்நுட்பம், பெண்களை மோசமாகச் சித்தரித்தல் ஆகிய சட்டங்களின் கீழ் பிரகாஷிற்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆட்கடத்தல் தொடர்பான வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறையிலேயே 13 ஆண்டுகளை கழித்திருப்பதாலும் நன்னடத்தையுடன் இருந்ததாலும் தன்னை விடுவிக்கும்படி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் மனுத்தாக்கல் செய்தார்.
சிறையில் இருந்த காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பதாகவும் சிற்பங்களைச் செய்திருப்பதாகவும் சிறைக் கைதிகளை சீர்திருத்தும் பணிகளில் ஈடுபட்டதாகவும் பிரகாஷ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பிரகாஷ் 13 ஆண்டுகளும் 4 மாதங்களும் சிறையில் கழித்திருப்பதால் அவரை விடுவிக்கலாம் எனவும் அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகையான 1,19,000 ரூபாயை செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னையில் புகழ்பெற்ற எலும்பு முறிவு மருத்துவராக இருந்த டாக்டர் பிரகாஷ், ஆபாசப் படங்களை எடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறை சென்ற சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
































