கைதுசெய்யப்பட்ட ஐந்து 'மாவோயிஸ்டு'களிடம் விசாரணை

பிரசுரிக்கப்பட்டது

கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவராகக் கூறப்படும் ரூபேஷ் என்ற ஜோகி உள்பட ஐந்து பேரிடம் தமிழக 'க்யூ' பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் உளவுத் துறைகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, அனுப், கண்ணன், ஈஸ்வரன் ஆகிய ஐந்து பேர் கோயம்புத்தூரில் உள்ள கருமத்தம்பட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தகவல் பரிமாற்றத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கருமத்தம்பட்டியில் உள்ள பேக்கரி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்தபோது, காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது கோயம்பத்தூர் - சேலம் மாவட்ட க்யூ பிரிவு காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

கைதுசெய்யப்பட்ட ரூபேஷ் என்பவர் மீது கேரள மாநிலத்தில் பல வழக்குகள் இருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணன், ஈஸ்வரன் ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.