சென்னையில் காவல்துறை ஆய்வாளர் தாக்கியதில் ஒருவர் பலி; பதற்றம்

பிரசுரிக்கப்பட்டது

சென்னை சாலிகிராமத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காகத் தாக்கியதில், அந்த வாகனத்தில் சென்ற மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமைடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் தாக்கி ஒருவர் உயிரிழந்தால் பதற்றம் ஏற்பட்டது.
படக்குறிப்பு, காவல்துறையினர் தாக்கி ஒருவர் உயிரிழந்தால் பதற்றம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள கே.கே. நகர் - சாலிகிராமம் பகுதியில் இளைஞர்கள் மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்படிச் செல்வது விதி மீறல் என்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்த போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் முயன்றார். ஆனால், அந்த வாகனம் நிற்காததால் ஆய்வாளர் அவர்களைத், தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அதில் இருந்த கம்பியால் கிழிக்கப்பட்டு செல்வம் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். ஆனால், உடனடியாக மருத்துவ உதவியேதும் செய்யப்படாத நிலையில், அந்த இளைஞர் சாலையிலேயே உயிரிழந்தார்.

மற்ற இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கினர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளரும் காவலரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். சாலை மறியலும் நடைபெற்றது. இதனால், சென்னையின் பிரதான பகுதியான வடபழனி விருகம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிறகு காவல்துறையினர் விரைந்துவந்து அவர்களை மீட்டுச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.