இருசக்கர வாகனத்தால் விபரீத விபத்து: 3 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் உள்ள பாரிமுனை பகுதியில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, தாறுமாறாக வந்த இருசக்கர வாகனம் ஏறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை பாரிமுனையில், விபத்து நடந்த சாலையோரம்.
படக்குறிப்பு, சென்னை பாரிமுனையில், விபத்து நடந்த சாலையோரம்.

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு, சகுந்தலா, அப்பு ஆகிய மூவரும் பாரிமுனை பகுதியில் பூ வியாபாரம் செய்துவருகின்றனர். பாரிமுனையிலிருந்து கண்ணகி நகர் வெகுதூரத்தில் இருப்பதால், சில நாட்களில் இவர்கள் அங்கேயே சாலையோரமாக படுத்து உறங்கிவிடுவது வழக்கம்.

செவ்வாய்க் கிழமையன்று இரவும் இந்த மூன்று பேரும் இதேபோல, துறைமுகம் தொகுதியின் எம்எல்ஏ அலுவலகம் அருகில் சாலையோரமாக படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர்.

அதிகாலை இரண்டு மணியளவில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்கள் மீது ஏறியது. இதில் மூன்று பேரின் மார்பெலும்புகள் நொறுங்கி, அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இருசக்கர வாகனத்தில் பயணம்செய்த மூன்று பேரும் சிறிய அளவில் காயமடைந்தனர். இதில் இரண்டு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைப் பார்த்ததும் தப்பிக்க முயன்று வேகமாக ஓட்டியதாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 வயதுக்கு மேற்பட்ட சாதிக் என்பவரிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. தான் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக காவல்துறையினரிடம் சாதிக் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பாரிமுனை பகுதியில், ஆயிரக்கணக்கானவர்கள் சாலையோரங்களில் வசித்துவருகின்றனர். செவ்வாய்க்கிழமையன்று இரவு மழை பெய்ததால், கடைகளின் வாசலில் படுத்து உறங்கியவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.