தன் மீது தேவையில்லாத அவதூறுகள்: ஹேமமாலினி
இந்தியாவில் பரபரப்புக்காக செய்திகளை தேடும் ஊடகங்களும் சில பொதுமக்களும் தன் மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்பியுள்ளதாக ஹேமமாலினி குறைகூறியுள்ளார்.

பட மூலாதாரம், Daboo
இதையடுத்து, ஹேமமாலினி விபத்து தொடர்புடைய செய்திகள் மீண்டும் சமுக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினரான நடிகை ஹேமமாலினி, ஒரு வார காலத்திற்கு முன்பாக சாலை விபத்தொன்றில் சிக்கினார். அதற்கான சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தனது நலன் மீது அக்கறை காட்டியவர்களுக்கு நன்றிகூறும் விதமாக, ட்வீட் வெளியிட்டிருக்கும் அவர், அனைவருக்கும் அதில் நன்றி தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில், ஆதரவற்று இருந்த தன்னைப் பற்றி, சில ஊடகங்களும் வேறு சிலரும் மனித நாகரிகமற்ற முறையில் அவதூறு செய்திகளைப் பரப்பியதாகவும் குறைகூறியுள்ளார்.
அவர்களது செய்கைகளுக்காக தான் வெட்கப்படுவதாகவும் ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற விபத்தின் காரணத்தால், தேவையில்லாமல் பலியாகியுள்ள குழந்தைக்காக தான் மனம் வருந்துவதாகவும் ஹேமமாலினி குறிப்பிட்டுள்ளார்.
வாகனத்தை செலுத்திய அக்குழந்தையின் தந்தை, ஒருவேளை விதிகளை மீறாமலிருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டு, அந்த குழந்தை இறக்க நேர்த்திருக்காது என்றும் தனது ட்வீட்டில் ஹேமமாலினி கூறியுள்ளார்.
ஹேமமாலினியின் இந்தக் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவதமாக உருவெடுத்துள்ளன.
ஹேமமாலினியின் கருத்துக்கு பதிலளித்துள்ள விபத்தில் இறந்த குழந்தையின் தந்தையான ஹர்ஷ் கண்டேல்வால், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஹேமமாலினி எதையும் சிந்தித்துப் பேசவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அவர், ஒருவேளை ஹேமமாலினியை அழைத்து சென்ற ஆம்புலன்சில் அவரது குழந்தையையும் அழைத்து சென்றிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.
ஒரு வாரத்திற்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த விபத்தில், ஹேமமாலினி பயணித்த உயர்ரக வாகனமும், ஒரு சிறிய காரும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், சிறிய காரில் இருந்த இரண்டு வயது குழந்தை பலியானது.
































