தயாநிதி மாறனின் ஜாமீன் ரத்து: நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது
தயாநிதி மாறனின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையன்று, நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர், வி. கோபால கவுடா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தயாநிதி மாறனின் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் அவரது மனுவை அவசரமாக ஏற்க வேண்டுமெனக் கோரினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது தொடர்பான விசாரணை புதனன்று நடத்தப்படும் என்று குறிப்பிட்டது.
தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது சட்டத்துக்கு விரோதமாக தனது இல்லத்தில் தொலைபேசி இணைப்பகத்தை வைத்திருந்தார் என அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பான விசாரணைக்கு சி.பி.ஐ. அழைத்தபோது, கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய தயாநிதி மாறன், இடைக்கால முன்ஜாமீனை பெற்றார்.
இருந்தபோதும், அவர் சிபிஐயின் விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஆனால், இதன் பின்பு நடைபெற்ற விசாரணைகளில் தயாநிதி மாறன் போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று கூறிய சிபிஐ, அவரது முன்ஜாமீனை ரத்துசெய்யக் கோரியது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அவரது இடைக்கால முன் ஜாமீனை ரத்துசெய்தது.
இதனால் தற்போது தயாநிதி மாறன் சி.பி.ஐ. காவலுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், அவரது தரப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
































