மும்பை உணவகத்தில் விபத்து; 8 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது

மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. எரிவாயு உருளைகள் வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மும்பை குர்லாவில் விபத்து நடந்த இடம்.
படக்குறிப்பு, மும்பை குர்லாவில் விபத்து நடந்த இடம்.

குர்லா மேற்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் அந்தக் கட்டடம் முழுவதும் தீக்கிரையானது.

இந்த விபத்தில் இறந்த எட்டுப் பேரில் ஏழு பேர் அருகில் உள்ள தொன் போஸ்கோ இன்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் படிக்கும் மாணவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து ஏற்பட்ட விதம் குறித்து பல்வேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த விபத்து எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என தி அசோஸியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால், மின்சார ஒயர்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணப்புத் துறை அதிகாரிகள் கருதுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மதிய உணவு நேரத்தில், அந்த உணவகம் முழுக்க வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.